சென்னை : பிரிட்டனில் இருந்து வந்தவர்களில், ஆறு பேருக்கு மரபணு மாறிய கொரோனா தொற்று இருப்பது, முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாடு முழுதும், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரம், பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவுக்குள் பரவுமோ என்ற அச்சம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8.13 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது வரை, பிரிட்டனில் இருந்து வந்தவர்களில், 13 பேர்; அவர்களுடன் தொடர்பில் இருந்த, 15 பேர் என, 28 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரையும் தனி அறையில் வைத்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தென் ஆப்ரிக்க நாட்டிலும் புதிய ரக தொற்று பரவுகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, தொற்று கண்டறியப்பட்டால், அவர்கள் அனைவருக்கும், தனியாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.இது குறித்து, சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிரிட்டனில் இருந்து வந்தோர், தொடர்பில் இருந்தோர் என, 28 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.அவர்கள் புதிய ரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த ஆய்வு, மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள, மத்திய அரசின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில், வைரசின் மரபணு மாறுபாடு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்லை.
ஆனாலும், சில பரிசோதனைகள் அடிப்படையில், ஆறு பேருக்கு, மரபணு உருமாறிய வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.இதற்கான ஆய்வை மத்திய அரசு மேற்கொள்வதால், அவர்கள் தான் உறுதி செய்து, அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE