நீதித்துறையில் 56 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர், கோவையை சேர்ந்த மூத்த வக்கீல் சங்கரநாராயணன். அரசு குற்றவியல் உதவி வக்கீலாக பணியில் சேர்ந்த இவர், அத்துறை துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகுல அரசு சிறப்பு வக்கீலாக பணியாற்றி வருகிறார். முஸ்கான், ரித்திக் கொலை உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்பனை பெற்று கொடுத்தார். அவருடன் ஒரு சந்திப்பு
நீதிமன்ற விசாரணையில், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க, ஒரு அரசு தரப்பு வக்கீலின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?
அரசு தரப்பில் ஆஜராகும் வக்கீல், சட்ட நுணுக்கத்தை தீவிரமாக ஆராய்ந்து, நீதிமன்றத்தில் திறமையாக வாதத்தை எடுத்துரைக்கும் பட்சத்தில், நிச்சயமாக தண்டனை பெற்று தரலாம். அதே நேரத்தில் புலன் விசாரணை அதிகாரிகளும், வழக்கை திறமையாக கையாண்டு, சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்றங்களை தடுக்க என்ன வழி?
பாலியல் குற்றங்களை தடுக்க, சட்டம் சார்ந்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்களை, தாயாக, சகோதரியாக பாவிக்கும் மனபக்குவம் இருந்தால், இது போன்ற குற்றங்கள் நிகழாது. பெற்றோர் கண்பார்வையில், பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்கும் பட்சத்தில், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ், அதிக பட்ச தண்டனை வழங்க திருத்தம் கொண்டு வரப்பட்ட பிறகும், பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளதே?
கொடூர எண்ணம் கொண்டவர்கள், ஆபாச வீடியோக்களை மொபைல் போனில் பார்த்து, தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு துாக்கு விதிக்கும் பட்சத்தில், தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆபாச வீடியோ செயலிகளை அரசு தடை செய்ய வேண்டும்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு என்ன காரணம்?
வழக்கு விசாரணை தாமதம் ஆவதற்கு, எதிர் தரப்பு வக்கீல்களும் காரணம். அடிக்கடி வாய்தா கேட்பதால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
ஒரு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டவர், பிறழ் சாட்சியாக (பல்டி) மாறினால், தீர்ப்பு எதிரிக்கு சாதகமாக அமையுமா?
அரசு தரப்பு சாட்சி, பிறழ் சாட்சியாக மாறினால், என்ன காரணத்திற்காக மாறினார் என்பதை கண்டறிந்து, அதற்கான உண்மை தன்மையை, விசாரணை அதிகாரிகள் உதவியோடு, அரசு தரப்பு வக்கீல், நீதிமன்றத்தில் எடுத்துரைத்தால், தண்டனை பெற்று தரலாம்.
இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று, சில அமைப்பினர் கோரிக்கை விடுக்கிறார்களே?
இந்தியாவில் கண்டிப்பாக மரண தண்டனை தேவை. கொடூர குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை அளிக்கும் பட்சத்தில், மற்றவர்களுக்கு பயம் ஏற்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE