அண்ணாத்தே க்கு தொகுதியில் இருபதாயிரம்: இன்னொரு மாஜியை இழுக்க நடக்குது பேரம்!| Dinamalar

'அண்ணாத்தே' க்கு தொகுதியில் இருபதாயிரம்: இன்னொரு 'மாஜி'யை இழுக்க நடக்குது பேரம்!

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020
Share
மருதமலை சுப்ரமணிய சுவாமியை தரிசித்து விட்டு, சித்ராவும், மித்ராவும் கோவை நோக்கி, ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.கேரளா பதிவெண் கொண்ட ஒரு கார், அவ்வழியாக, சரட்டென வேகமாக கடந்து சென்றது. அதைக்கவனித்த சித்ரா, ''மித்து, கத்தியை காட்டி, கடத்திட்டு போன காரை, மாதம்பட்டி பக்கத்துல மீட்டாங்களாமே,'' என, பேச்சை துவக்கினாள்.''ஆமாக்கா, ஹவாலா பணம் சிக்கியிருக்கிறதா
 'அண்ணாத்தே' க்கு தொகுதியில் இருபதாயிரம்: இன்னொரு 'மாஜி'யை இழுக்க  நடக்குது பேரம்!

மருதமலை சுப்ரமணிய சுவாமியை தரிசித்து விட்டு, சித்ராவும், மித்ராவும் கோவை நோக்கி, ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.கேரளா பதிவெண் கொண்ட ஒரு கார், அவ்வழியாக, சரட்டென வேகமாக கடந்து சென்றது.

அதைக்கவனித்த சித்ரா, ''மித்து, கத்தியை காட்டி, கடத்திட்டு போன காரை, மாதம்பட்டி பக்கத்துல மீட்டாங்களாமே,'' என, பேச்சை துவக்கினாள்.

''ஆமாக்கா, ஹவாலா பணம் சிக்கியிருக்கிறதா போலீஸ்காரங்க சொல்றாங்க. இந்த சம்பவத்துல ஏகப்பட்ட மர்மம் இருக்கறதா தோணுது. ஏன்னா, அந்த காரை, ஒரு குரூப் 'பாலோ' பண்ணிட்டு வந்து, நவக்கரை பக்கத்துல வழிமறிச்சு கடத்தியிருக்கு; மீட்கப்பட்ட அந்த காரில், 90 லட்சம் ரூபாய் இருந்ததா கணக்கு காண்பிச்சிருக்காங்க,''

''சிறுவாணி ரோட்டுல, 80 இடத்துல, கண்காணிப்பு கேமரா இருக்குதாம். ஒரு இடத்துல கூட, மீட்கப்பட்ட கார் கடந்துசென்ற பதிவு இல்லையாம். கேமரா இல்லாத 'ரூட்'டை தெரிஞ்சவங்களே, கடத்தல் கும்பலுக்கு 'மேப்' போட்டு கொடுத்திருக்கலாம்னு சந்தேகப்படுறாங்க,''

''சம்பவம் நடந்த இடத்துக்கு, போலீஸ் உயரதிகாரிகள் பலரும் வந்துட்டு போயிருக்காங்க. ஏன்னா, சிக்குனது சில லட்சமா இருந்தாலும், பல கோடி ரூபாய் ஹவாலா பணம் தப்பிச்சிட்டதா, உளவுத்துறை போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க. சில அதிகாரிகள், கேரளாவுக்கும் பயணப்பட்டு இருக்காங்களாம். காரில் வந்த இருவரையும் 'முறைப்படி' விசாரிச்சா, 'தங்க ரகசியம்' வெளிச்சத்துக்கு வரும்னு, போலீஸ்காரங்க சொல்றாங்க,''

''உளவுத்துறைன்னு சொன்னதும், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. ரஜினிக்கு நம்மூர்ல செல்வாக்கு எப்படியிருக்குன்னு, மத்திய உளவு துறை விசாரிக்குதாம். தொகுதிக்கு, 20 ஆயிரம் பேர் ஆதரவாளர்களா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டதும் ஆச்சரியப்பட்டாங்களாம்,''

''ரஜினியை சாதாரணமா எடை போட்டுட்டாங்க போலிருக்கு,'' என்ற மித்ரா, ''தி.மு.க., வட்டாரத்துல, மாவட்ட செயலாளர்களுக்குள் மனக்கசப்பாமே,'' என, நோண்டினாள்.

''அதுவா, ஆளுங்கட்சி 'மாஜி'யை இழுத்தாங்களே; இணைப்பு விழாவுக்கு, மேற்கு மாவட்டத்துக்காரரு அழைச்சுட்டு போயிருந்தாராம். கடைசி நேரத்துல, இன்னொரு நிர்வாகி மூக்கை நுழைச்சிட்டாராம். 'அப்செட்'டான மாவட்ட நிர்வாகி, பாதியிலேயே திரும்பி வந்துட்டாராம்,''

''அடடே... அப்புறம்,''

''மாஜியை இழுத்ததால, தி.மு.க.,வுக்கு பலமில்லைன்னு தெரியுமாம்; ஆளுங்கட்சிக்கு 'வீக்'கா இருக்கும்னு நெனைக்கிறாங்க. அ.தி.மு.க., கோட்டைன்னு தம்பட்டம் அடிச்சிக்கிட்டு இருக்கற இடத்துல, ஒருத்தரை துாக்கி, ஓட்டை விழ வச்சிருக்கறதே ஒரு வெற்றின்னு, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''

''இன்னொருத்தரிடமும் பேசிட்டு இருக்காங்களாமே,''

''ஆளுங்கட்சி தரப்புல ரொம்பவே உஷாரா இருக்காங்க. முக்கிய நிர்வாகிகளை கண்காணிச்சிட்டு இருக்காங்க. ஆளுங்கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு தாவிய, 'துரையான', 'மாஜி' கிட்ட பேரம் பேசுறாங்களாம்,''

''ஓஹோ... அப்படியா சங்கதி,'' என்ற மித்ரா, ''தடையை மீறி, மக்கள் கிராம சபை நடத்துறாங்களே... எப்படியிருக்கு,'' என, கேட்டாள்.

''அ.தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டு; குரூப் ஓட்டு அதிகமா இருக்குற இடங்களில் கூட்டம் நடத்தி பேசுறாங்க; ஒவ்வொரு இடத்திலும், குறைந்த பட்சம், 200 பேரையாவது அழைச்சிட்டு வர்றாங்க. முக்கியமா, லேடீஸ்சை கூட்டிட்டு வர்றாங்க,''

''அதையும் மீறி, எப்படியும் ஜெயிச்சிடலாம்னு, அ.தி.மு.க.,காரங்க தெம்பா இருக்காங்க போலிருக்கே,''

''ஆமா மித்து, இன்னும் கொஞ்ச நாள்ல பொங்கல் பரிசு கொடுக்கப் போறாங்க. அடுத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் வருது; பரிசு மழையை அள்ளி விடப் போறாங்களாம். பிப்., மாசம் ஜெ., பிறந்த நாள் வருது. 'மைக்ரோ லெவல்ல' வீதிக்கு வீதி விழா நடத்தி, வாக்காளர்களை கவரப்போறாங்களாம்,''

''இன்னும் பள்ளிக் கூடமே திறக்கலை; இருந்தாலும் ஆசிரியர்களுக்கு 'டிரான்ஸ்பர்' கொடுக்குறாங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். தொற்று பரவலை காரணம் காட்டி, இந்த வருஷம் 'கவுன்சிலிங்' நடத்தலை. ஆனா, வெளி மாவட்டத்துல இருந்தும், வேற ஒன்றியங்களில் இருந்தும், 15 டீச்சர்ஸ் நம்மூருக்கு போஸ்டிங் 'வாங்கிட்டு' வந்திருக்காங்களாம்,'' ''வெளிமாவட்டத்துல இருந்து வரணும்னா, அஞ்சு லகரமாம்; மாவட்டத்துக்குள்ளேயே விரும்புற பள்ளிக்கு, அப்பாயின்மென்ட் வாங்கணும்னா, மூணு லகரம் பேரம் பேசுறாங்களாம்,''

''லகர வரிசையில் கொடுத்துதான், கிருஷ்ணகிரி, தேனியில் இருந்து வந்திருக்காங்களாம். தேர்தலுக்குள் கல்லா நிரப்புறதுக்காக, ஆளுங்கட்சிக்காரங்களே புரோக்கரா இருந்து, ஆர்டர் வாங்கிக் கொடுக்குறாங்களாம். இயக்குனரகத்தில் இருந்தே உத்தரவு வர்றதுனால, மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள், விழிபிதுங்கி இருக்காங்க,'' என்றபடி, வடவள்ளியில், ஓட்டல் முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.

மசால் ரோஸ்ட், பில்டர் காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, ''ஊராட்சியில் லே-அவுட் அனுமதி வாங்கறதுக்கு, லட்சக்கணக்குல கறக்குறாங்களாமே,'' என, இழுத்தாள்.

''ஆமாக்கா, சோமையம்பாளையம் ஊராட்சியில், நிழல் தலைவரா செயல்படுற 'உறவினர்', கரன்சி வாங்கிட்டுதான் காரியத்தை முடிச்சுக் கொடுப்பாராம்,''டேபிளுக்கு வந்த மசால் ரோஸ்ட்டை சுவைத்த சித்ரா, ''மாவட்ட நிர்வாகமும் 'அப்செட்'டுல இருக்காமே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள்.

''அதுவா, வழக்கமா, ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் வைத்தே பொருாளதார கணக்கெடுப்பு நடத்துவாங்க. இந்த தடவை ஏஜன்சி கிட்ட ஒப்படைச்சிருக்காங்க; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கெடைச்சிருக்கு. ஆனா, சேகரிச்ச 'டேட்டா' அத்தனையும் 'வேஸ்ட்'டாம். அரசு ஊழியர்கள் தப்பு செஞ்சிருந்தா, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். ஏஜன்சி ஊழியர்களை ஒண்ணும் செய்ய முடியாதேன்னு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் புலம்பிட்டு இருக்காங்களாம்,''பில்டர் காபியை உறிஞ்சிய மித்ரா, ''மெடிக்கல் சர்ட்டிபிகேட் கொடுக்கறதுக்கும் கரன்சி வாங்குறாங்களாமே,'' என, கேட்டாள்.

''உண்மைதான் மித்து. அரசு ஊழியர்கள் ரொம்ப நாள் லீவு எடுத்தா, ஜி.எச்., டாக்டரிடம் 'மெடிக்கல் சர்ட்டிபிகேட்' வாங்கி சமர்ப்பிக்கணும். ஒரு டாக்டரும், ஊழியர் ஒருத்தரும் இணைந்த கரங்களாகி, ஆயிரக்கணக்குல லஞ்சம் கேக்குறாங்களாம். ஏகப்பட்ட புகார் வந்ததால, அந்த ஊழியரை வேறு பிரிவுக்கு மாத்துறதுக்கு முயற்சி செஞ்சிருக்காங்க; செல்வாக்கை பயன்படுத்தி, 'டிரான்ஸ்பர்' போட விடாமல் தடுத்துட்டாராம்,''

''அதெல்லாம் இருக்கட்டும்; வேற ஊருக்கு 'டிரான்ஸ்பராகி' போனாலும், இன்னமும் செல்வாக்கோட இருக்காராமே,''

''கொரோனா பிரச்னையில் சிக்கி, சென்னைக்கு விரட்டப்பட்ட டாக்டரை தானே சொல்றீங்க. அவருக்கு சொந்தமா, நம்மூர்ல பெருசா ஒரு வீடு இருக்கு. அதை பராமரிக்குற வேலைக்கு, ஆஸ்பத்திரி பணியாளர்களே போயிட்டு வர்றாங்க,'' என்றபடி, பில் தொகையை கொடுத்து விட்டு, ஓட்டலை விட்டு வெளியே வந்தாள் சித்ரா. ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த மித்ரா, வீட்டை நோக்கி முறுக்கினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X