ஆடும் ஆட்டத்துக்கு 'லகரத்தில்' லஞ்சம்...ஆடாத ஆட்டம் ஆடினால் 'தகரமே' மிஞ்சும்!

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020
Share
Advertisement
சனிப்பெயர்ச்சிக்கு அவிநாசி கோவில் சென்று விட்டு, சித்ரா வீட்டுக்கு வந்த மித்ரா, சோபாவில் அமர்ந்தாள். சுடச்சுட காபி கொடுத்தாள் சித்ரா.''அக்கா, என்னோட டிரைவிங் லைசென்ஸ் விஷயமா ஒரு வேலை இருக்கு. ஆர்.டி.ஓ., ஆபிஸ் வரை போலாமா?'' என்றாள் மித்ரா.''ஏதாவது, டிரைவிங் ஸ்கூல்காரங்க கிட்ட போனா, அவங்களே முடிச்சு குடுத்துட போறாங்க. பெரிய ஆபீசர்கள், அவங்க கூட தான் ரொம்ப நெருக்கமா
 ஆடும் ஆட்டத்துக்கு 'லகரத்தில்' லஞ்சம்...ஆடாத ஆட்டம் ஆடினால் 'தகரமே' மிஞ்சும்!

சனிப்பெயர்ச்சிக்கு அவிநாசி கோவில் சென்று விட்டு, சித்ரா வீட்டுக்கு வந்த மித்ரா, சோபாவில் அமர்ந்தாள். சுடச்சுட காபி கொடுத்தாள் சித்ரா.

''அக்கா, என்னோட டிரைவிங் லைசென்ஸ் விஷயமா ஒரு வேலை இருக்கு. ஆர்.டி.ஓ., ஆபிஸ் வரை போலாமா?'' என்றாள் மித்ரா.

''ஏதாவது, டிரைவிங் ஸ்கூல்காரங்க கிட்ட போனா, அவங்களே முடிச்சு குடுத்துட போறாங்க. பெரிய ஆபீசர்கள், அவங்க கூட தான் ரொம்ப நெருக்கமா இருக்காங்களே. ஆபீசர்கள் ஒவ்வொருத்தர் கிட்டேயும் சொந்தமா வண்டி இருந்தும், டிரைவிங் ஸ்கூல்காரங்களோட வண்டில தான் போறாங்க... வர்றாங்க!,'' சொன்னவாறே டம்ளரை கீழே வைத்தாள் சித்ரா.

''உண்மைதாங்க்கா...'' என ஆமோதித்த மித்ரா,

''அவிநாசிக்கு புதுசா வந்திருக்கற ஒரு லேடி ஆபிசர், கல்லா கட்றதுல கில்லாடியாம். தினமும், இவ்வளவு வீட்டுக்கு கொண்டு போகணும்னு, 'டார்கெட்' பிக்ஸ் பண்ணி, வசூல்வேட்டை நடத்துறாங்களாம். இதுக்கு முன்னாடி எத்தனையோ பேர பார்த்துட்டோம். ஆனா, இவங்கள மாதிரி இல்லேன்னு, புலம்பல் ஜாஸ்தியாயிடுச்சாம்,'' என்ற மித்ரா,

''போன வாரம் கூட அங்க போன என் பிரண்ட் சித்ரா தான், இத பத்தி என்கிட்ட சொன்னா,'' என, சாட்சிக்கு தன் தோழியை இழுத்தாள்.இருவரும், ஆர்.டி.ஓ., ஆபீஸ் கிளம்ப, ரோட்டில் போலீசாரின் வாகன சோதனை பலமாக இருந்தது.

''என்னக்கா, போலீஸ்காரங்க கெடுபிடி அதிகமா இருக்கு,''

''தெரியலைடி. ஈஸ்வரன் கோவில் முன்னாடி சாக்கடை கால்வாய் வேலை நடக்குறதால, அங்க இருக்கற சந்து வழியா வண்டிங்க போகுது. அந்த இடத்துல, சவுத் டிராபிக்காரங்க மறைஞ்சு நின்னுகிட்டு, வண்டியில வர்றவங்கிட்ட, அதை இதையும் சொல்லி, ஆயிரம், ரெண்டாயிரம்னு கறந்துடறாங்க. அதுமட்டுமில்லாம வாகன ஓட்டிகள, ரொம்ப அநாகரிகமாக பேசறாங்களாம்''

''இப்டி, முட்டு சந்துக்குள்ள நின்னு கூட வசூல் பண்றாங்களே. இதையெல்லாம் கமிஷனர் கண்டுக்குவாரான்னு, சில வாகன ஓட்டிங்க, போலீஸ்காரங்க காதுபடவே பேசறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''சிட்டிக்குள்ள சட்ட விரோதமா செயல்படற பார்கள்ல சூதாட்டம் நடக்கிறத பத்தியும், போலீஸ்காரங்களுக்கு மாமூல் வசூல் பண்ணி தர்ற ஒருத்தர பத்தியும் போன வாரம் பேசினோம் ஞாபகமிருக்கா,''

''ஆமான்டி, அதில என்ன டெவலப்மென்ட்,''

''உஷாரான போலீஸ்காரங்க, அவங்க மேல எந்த ஆக்ஷனும் எடுக்காம 'பார்த்து கவனமாக நடத்துங்க, மாட்டிக்காதீங்கன்னு அக்கறையா 'ரெட் அலர்ட்' கொடுத்திருக்காங்களாம்''

''அடக்கொடுமையே, ஏதாச்சும் நடவடிக்கை எடுப்பாங்கன்னு பார்த்தா, இப்படி எட்டப்பன் வேல பாக்கறாங்களே. தி இஸ் டூமச்,'' கோபப்பட்ட சித்ரா,

''நார்த் ரேஞ்ச் பி.என்., ரோட்ல மட்டும், ஏழு இடங்கள்ல சூதாட்டம் நடக்குதாம்,''

''இதுல, ஆளுங்கட்சிய சேர்ந்த 'மாஜி' முக்கிய பிரமுகர், அப்புறம் அவங்க கையாட்களுக்கும் தொடர்பு இருக்காம். அதுல, சம்மந்தப்பட்ட ஒருத்தர் மேல நிறைய கேஸ் இருக்காம். ஒவ்வொரு கிளப்பில் இருந்தும் மாசம், 15 லகரம் வரைக்கும் மாமூல் பக்காவா போகுதாம், நெருக்கமான வட்டாரங்கள் செய்தி வாசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

''நீங்க சொல்றத பார்த்தா, 'சிட்டி' போலீஸ்ல இருக்கற, வி.ஐ.பி.,களுக்கு கூட பங்கு போகும் போல இருக்கே,'' என்ற மித்ரா,

''அது சரிக்கா இதையெல்லாம் கண்காணிக்க தானே, ஐ.எஸ்., இருக்காங்க. அவங்க என்னக்கா பண்றாங்க,'' என, சந்தேகம் எழுப்பினாள்.

''அடப்போடி. கள நிலவரத்தை நேரடியா போய் பாக்கறதே கிடையாது. குறிப்பா, சென்னைக்கு 'ரிப்போர்ட்' அனுப்ப வேண்டிய, ஒற்றர் படையினர், 'வர்க் ப்ரம் ேஹாம்' தான். காதுல கேட்கற விஷயத்தை, பெரிய ஆபீசர்ங்க கிட்ட சொல்லி, வேலைய முடிச்சுக்கிறாங்க'' என்றாள் சித்ரா.

''தேர்தல் டைம்ல இப்படி இருந்தாங்கன்னா, அரசியல் கள நிலவரத்தை எப்படி கணிப்பாங்களோ'' என ஆதங்கப்பட்ட மித்ரா,

''நீங்க சொல்றது நுாறு சதவீதம் உண்மை. குறிப்பா சொல்லோணும்னா, ரூரல் பகுதியில உள்ள ஸ்டேஷன்களில் இருக்குற இப்படை போலீஸ்காரங்க 'ராஜ' வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க,'' என்றாள்.

''போலீஸ்காரங்களுக்கு போட்டியா, பாரஸ்ட்காரங்களும் கல்லா கட்றதுல களம் இறங்கிட்டாங்க,'' என்றாள் மித்ரா.

''இது, எங்கடி?''

''காங்கயத்துலதான். வீரணம் பாளையம்ங்கற இடத்தில் 'பாரஸ்ட்' காரங்க, தினமும் அதிகாலை நேரத்துல வாகன தணிக்கை செய்றாங்க. விறகு லோடு ஏத்திட்டு வர்ற, லாரிகள நிறுத்தி, வசூல் அள்றாங்க. அதுவும், ஒரு மீசைக்கார ஆபீசரு, தனி ஆளா நின்னுகிட்டு நாட்டாமை பண்ணி, பாக்கெட்ட நிரப்பறாராம்,''

''ஒரு வேளை, அந்த ஆபீசரு சரியா பங்கு பிரிச்சு கொடுக்கலையோ, என்னவோ… இதே மாதிரி, 'டேக்ஸ்' ஆபீசர்ஸ், அவிநாசி பைபாஸ், சர்வீஸ் ரோட்ல, நடுராத்திரியில நின்னுகிட்டு, வாகன தணிக்கைங்கற பேர்ல கனரக வாகனங்கள நிறுத்தி, வசூல் பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''எவ்ளோ, குளிர் அடிச்சாலும், 'கடமையே' கண்ணாக இருக்கறாங்களே,'' என சிரித்த சித்ரா, ஆர்.டி.ஓ., ஆபீஸ் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினாள்.இருவரும் உள்ளே நுழைந்த போது, அலுவலகத்தில் இருந்தவர்கள், ஆவணங்களை சரி பார்த்த பின், பெரிய அதிகாரியின் கையெழுத்து வாங்க, அவரின் அலுவலகம் முன் காத்திருந்தனர்.

''கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, 10 நிமிஷத்துல ஐயா வந்துடுவார்ன்னு'' அவரது உதவியாளர் கூறி சென்றார்.அங்கு பல பேர் முக கவசம் அணியாமல் சுற்றிக் கொண்டிருக்க, 'ஏன் மித்து, ரேஷன் கடைல தான் மாசா, மாசம் 'மாஸ்க்' தர்றாங்கள்ல. அத கூடவா வாங்கி வைச்சுக்க மாட்டாங்க. கொஞ்சம் கூட பயம் இல்லாம இப்படி சுத்தறாங்களே'' என கோபப்பட்டாள் சித்ரா.

''அட போங்க்கா. இப்ப எல்லாம், தர்றது இல்லையாம். மக்களும் கேக்கறதில்லை. ஆனா, மாஸ்க் வாங்கிட்டதா மட்டும், எஸ்.எம்.எஸ்., வந்துடுதாம்'' என்றாள் மித்ரா.

''இதுல கூடவா, கமிஷன் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க…'' என ஆதங்கப்பட்டாள் சித்ரா.

''எல்லாத்துலேயும் காசுதாங்க்கா. இதனாலேயே, சூரியக்கட்சி மாஜி, திரிசங்கு நிலைமையில இருக்காராம்,''

''அது என்னடி மேட்டர்''

''சாமியான அந்த மாஜி, காங்கயத்தில் நிக்கலாமுன்னு, ஐடியா பண்றாரு. ஆனால, ஜல்லிக்கட்டு போராட்டத்துல பேமஸ் ஆனவரும், காய் நகர்த்துறார். சரி இங்க வேண்டாமுன்னு, திருப்பூர் தெற்கு பக்கம் போன, அங்கிருக்கற, 'செல்வ'மானவர், கேட் போடறாராம், இதனால, என்ன செய்றது, எந்த தொகுதிய கேட்கறதுன்னு, உச்சகட்ட குழப்பத்தில இருக்காராம்,''

''ஒரு காலத்தில, அந்த கட்சி தலைவருக்கு ரொம்ப நெருக்கமா இருந்த அவருக்கே இந்த கதியா,'' ஆதங்கப்பட்ட சித்ரா,

''பெருமாள் கோவில்ல நடந்த ஒரு விஷயம் கேள்விபட்டியா?'' என்றாள்.

''ஏங்க்கா, என்ன நடந்துச்சு''

''வைகுண்ட ஏகாதசியப்ப, யாரையும் அனுமதிக்காம சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தினாங்க. தரிசனம் செய்ய வந்த தாசில்தாரை கூட கோவிலுக்குள் அனுமதிக்கலையாம். ஆனா, சிறப்பு கட்டணம்னு சொல்லி, 50 ரூபாய் வாங்கிட்டு, 6,000 பேருக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. சுவாமிக்கு மாலைய குறைவா சாத்திட்டு, பிளாஸ்டிக் பூக்களை டெக்கரேஷன் பண்ணி, செலவு கணக்கு காண்பிச்சுட்டாங்களாம்,''

''அட பெருமாளே நீதான், இவங்களை பாத்துக்கணும்,'' கும்பிடு போட்ட போது, அதிகாரி அலுவலகத்திற்குள் நுழைந்தார். அவரிடம் கையெழுத்து வாங்கிய மித்ரா. வந்த வேலை முடிந்ததால், இருவரும் கிளம்பினர்.சிக்கண்ணா காலேஜ் ரோடு வழியாக பயணிக்க, ''கூடைப்பந்து மைதானம் கட்ற விவகாரத்துல ஒரு குடைச்சல் வந்திடுச்சு,''

''எஸ்.டி.ஏ.டி., மூலமா, பொதுப்பணி துறைக்காரங்க, 3 லட்சம் ரூபாய் செலவுல கூடைப்பந்து மைதானம் கட்டியிருக்காங்க. 'கோல்' போஸ்ட்டோட உயரம், அகலம் விதிகளுக்கு முரணா இருந்துருக்கு. இதனால, மைதானத்துல கூடை பந்துக்கான கட்டமைப்பை ஏற்படுத்தாம, நான்கு வருஷமா கிடப்பில போட்டு வச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா.சாலையோரம், வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சில கட்சிக்காரங்க ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.

''சிட்டி காங்கிரசில், மாவட்ட நிர்வாகிகளுக்கும், பெண்கள் பிரிவுக்கும், இடையே, பூசல் வலுத்துடுச்சாம். என்னதான், உழைச்சாலும் மரியாதை இல்லைன்னு, மகிளா காங்கிரஸ்காரங்க புலம்பறாங்க.இதனால, முன்னாள் பிரதமர் பேர் கொண்ட முக்கிய நிர்வாகி தலைமையில, ஒரு டீம், தாமரை கட்சியில ஐக்கியமாகிட்டாங்க. இன்னும் பலருக்கும் வலை விரித்துள்ளதாக, ஒரு தகவலும் இருக்குதாங்க்கா,''

''தேர்தல் நெருங்க... நெருங்க, இன்னும் பல கூத்து அரங்கேறும்னு நினைக்கிறேன். அடடே, மறந்துட்டேன் பாத்தியா,''

''எத மறந்தீங்க?''

''அவிநாசி கிட்ட, எம்.ஜி.ஆர்., நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அப்ப, போதையில வந்த பழமையான கரையின் கிராம துணை தலைவர், ஒன்றிய நிர்வாகிகிட்ட, சண்டை போட்டார். இதுக்கு சப்போட்டா பலரும் பேச, முச்சந்தியில, கோஷ்டி கானம் பலமா கேட்டுதாம்,''

''இதனை பலரும் வீடியோ எடுத்து, 'சபா'வுக்கு அனுப்பிட்டாங்க. எலக் ஷன் நேரத்தில, இது என்ன தலைவலின்னு புலம்பிய 'சபா', அல்லாரையும் கூப்பிட்டு, சமாதான கூட்டம் நடத்த முடிவு செஞ்சிருக்காராம்,'' சொன்ன சித்ரா, மித்ராவை அவள் வீட்டில்இறக்கி விட்டு, புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X