புதுடில்லி : சீனாவைச் சேர்ந்தவர்கள், வேறு நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு பயணம் செய்வதை தடுக்கும் வகையில், விமான நிறுவனங்களுக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா - சீனா இடையே, எல்லையில் மோதல் ஏற்பட்டு, பிரச்னை நீடித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சீனாவுக்கான விமான சேவையை, நம் அரசு ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. சீனாவும், பல நாடுகளில் இருந்து சீனாவுக்குள் வருவதற்கு தடை விதித்துள்ளது. 'ஏர் பப்பிள்' எனப்படும், குறிப்பிட்ட சில நாடுகளுடன், விமான சேவையைத் தொடர, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதைப் பயன்படுத்தி, அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நாடுகளில் உள்ன சீனர்கள், இந்தியாவுக்கு வரத் துவங்கினர்.கடந்த மாதத்தில் இருந்து, சீனாவில் இருந்து இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து, இந்தியாவுக்குள் சீனர்கள் வருவது அதிகரித்துள்ளது.சீனா - ஆஸ்திரேலியா இடையே, வர்த்தகப் போர் நிலவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற, இந்தியாவைச் சேர்ந்த இரண்டு சரக்கு கப்பல்கள், ஆறு மாதங்களாக சீன துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சீனாவைச் சேர்ந்தவர்கள், எந்த நாட்டில் இருந்தும் இந்தியாவுக்குள் வருவதை தடுக்கும் வகையில், சீன பயணியரை தவிர்க்கும்படி, அனைத்து விமான நிறுவனங்களுக்கும், மத்திய அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE