சென்னை : 'தினமலர் - வாரமலர்' இதழில், 95 வயது ஆன்மிக எழுத்தாளர் சீனிவாச ஆச்சாரியார் பற்றிய கட்டுரை, இம்மாதம், 20ம் தேதி வெளியான நிலையில், அவரை பற்றி, நேற்று முன்தினம், பிரதமர் மோடி, 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நீண்ட நேரம் பேசி/ அவரை பெருமைப்படுத்தி உள்ளார்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் சீனிவாச ஆச்சாரியார்; கோவில் குருக்கள். தமிழிலும், சமஸ்கிருதத்திலும் தேர்ந்தவரான இவர், கோவிலில், வீட்டில் செய்ய வேண்டிய பூஜைகள் பற்றி எழுதி, அதை புத்தகமாக்கி வெளியிட்டுள்ளார். இதுவரை, 16 புத்தகங்கள் வெளியாகி உள்ளன. இவருக்கு உதவியாளர் யாரும் கிடையாது. தன், 86 வயதில் கம்ப்யூட்டர் பற்றி தெரிந்து கொண்டு, அதில் தான் தன் படைப்புகளை தட்டச்சு செய்து வருகிறார்.இப்போதும், கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து, பல மணி நேரம் தட்டச்சு செய்து வருகிறார்.இதுபற்றிய கட்டுரை, இம்மாதம், 20ம் தேதி, நம் நாளிதழின் இணைப்பாக, ஞாயிறு தோறும் வெளியாகும், 'வாரமலர்' இதழில் வெளியாகி இருந்தது. கட்டுரையை படித்த பலரும் பாராட்டுவது, மகிழ்ச்சி அளிப்பதாக, சீனிவாச ஆச்சாரியார் நன்றி தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி, தனக்கும், நாட்டிற்கும் உத்வேகம் அளித்து வருபவர்கள் பற்றி குறிப்பிட்டு, 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் பேசினார். அப்போது, நீண்ட நேரம் பாராட்ட எடுத்து கொண்டது, நம்ம ஊர் சீனிவாச ஆச்சாரியார் பற்றி தான். இந்த வயதிலும், இவர் ஆன்மிகத்திற்கு ஆற்றி வரும் தொண்டு பற்றி குறிப்பிட்டு, மனம் திறந்து பாராட்டினார்.'பிரதமரின் பாராட்டு, தனக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது' என, சீனிவாச ஆச்சாரியார் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE