விவசாயத் துறையில் தொழில் முனைவோராக மாற்றி, ஈரோடு மாவட்டம், கள்ளிப்பட்டியில், 'கழனி உழவர், உற்பத்தியாளர் நிறுவனம்' என்ற நிறுவனத்தை துவங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்து உள்ளது பற்றி கவிதா: எனக்கு பூர்வீகம், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம். கல்லுாரி முடித்ததும், திருமண வாழ்க்கை என நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது.திடீரென வேலைக்கு போக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
விவசாயம் சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்கு போனேன்; அங்கு விவசாயிகளுடன் நேரடி அனுபவம் கிடைத்தது. மத்திய, மாநில அரசுகளின் விவசாயி களுக்கான திட்டங்களை அறிந்து கொண்டேன். கடந்த, 2016ல், 500 விவசாயிகளை சேர்த்து, கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை துவக்கினேன். அதன் பின், உறுப்பினர் எண்ணிக்கை, 1,000 ஆக உயர்ந்தது. இந்த, ஆயிரம் விவசாயிகளும் தலா, 1,000 ரூபாய் செலுத்தி, 10 லட்ச ரூபாய் பெற்று, அதன் வாயிலாகநிறுவனத்தை வளர்ச்சி அடையச் செய்தோம்.விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை வாங்கி, அப்படியே அல்லது அவற்றின் மதிப்பை கூட்டி விற்பனை செய்கிறோம்.
எங்கள் நிறுவனத்துடன் இணைந்துள்ள விவசாயிகளுக்கு, இதனால் பொருட்களை எளிதாக விற்பனை செய்ய முடிகிறது; பொருட்களுக்கு உடனடியாக விற்பனை வாய்ப்பும் வருகிறது. உற்பத்தி செய்வதுடன், விவசாயிகளே விற்பனையாளர்களாக மாறினால், விவசாயத்தில் நஷ்டம் ஏற்படவே செய்யாது. அதற்கு தான் எங்கள் நிறுவனம் உதவுகிறது. எங்கள் நிறுவனத்தில் விவசாயிகள், தங்களின் பொருட்களை விற்பனை செய்ய முடியும். அதுபோல, மதிப்பு கூட்டி கூடுதல் லாபத்தில் விற்பனை செய்யவும் முடியும். விற்பனைக் கூடமும் நடத்தி வருவதால், எங்களின் விவசாயிகள், தங்கள் பொருட்களை எளிதாக விற்பனை செய்து, உடனடியாக பணத்தையும் பார்க்க முடிகிறது.எங்கள் நிறுவனத்தால், விவசாய உற்பத்தி பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கிறோம். சமீபத்தில் எங்களுக்கு, ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு, செவ்வாழை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்தது. வாரம், 20 டன் என, ஓராண்டுக்கு இந்த ஆர்டரை செயல்படுத்த முடியும்.சும்மா வீட்டில் இருந்தால், இவ்வளவு பெரிய நிறுவனத்தை துவக்கி இருக்க முடியாது.
இப்போது எங்கள் நிறுவனத்தில், 10 இயக்குனர்கள், 11 பணியாளர்கள் உள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 140 பொருட்களை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்கிறோம்.சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஈரோட்டிற்கு கூட தனியாக சென்று வரத் தெரியாத பெண்ணாக இருந்த நான், இப்போது, வெளிநாடுகளுக்கும் தனியே சென்று வருகிறேன்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE