கான்பூர் : உத்தர பிரதேசத்தில், மத்திய அரசின், 'என் தபால் தலை' திட்டத்தின்கீழ், 'தாதா'க்களின் புகைப்படங்களுடன், தபால் தலைகள் வெளியிடப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 'என் தபால் தலை' என்ற பெயரில், தனி நபர்களின் உருவப் படங்களுடன், தபால் தலைகள் வெளியிடும் மத்திய அரசின் திட்டம், நாடு முழுதும் அமலில் உள்ளது.
அதிர்ச்சி : இதன்படி, தனி நபர்களின் புகைப்படத்துடன், நிறுவனங்களின் சின்னம், கலைப் பொருட்கள், பாரம்பரிய கட்டடங்கள், புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றின் படங்களை இணைத்து, தபால் தலைகள் வெளியிடப்படும். அதன்படி, ஓர் அட்டையில், 12 தபால் தலைகள் வெளியிடப்படும். அதற்கு, கட்டணமாக, 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், கான்பூரில், இந்த திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தபால் தலைகளால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அலட்சியம் : மும்பை முன்னாள் நிழல் உலக தாதாவான சோட்டா ராஜன் மற்றும் தாதா முன்னா பஜ்ரங்கியின் புகைப்படங்களுடன், தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்காக, 600 ரூபாய் கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்த விசாரணையை, கான்பூர் தபால் துறை துவங்கி உள்ளது. இதில், தொடர்புடையோரை கண்டுபிடிக்கும் முயற்சிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் வாயிலாக, தபால் துறை அதிகாரிகளின் அலட்சியம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE