வாஷிங்டன் : திபெத்தில், அமெரிக்க துாதரகம் திறப்பது; அடுத்த தலாய்லாமாவை சீனாவின் தலையீடு இல்லாமல் திபெத்திய புத்த மதத்தினர் தேர்வு செய்ய ஒத்துழைப்பது உள்ளிட்டவை அடங்கிய, புதிய திபெத் கொள்கைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆசியாவில் உள்ள திபெத்தை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா அறிவித்துள்ளது. தனி நாடு கோரும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை, பயங்கரவாதியாக சீனா அறிவித்துள்ளது. திபெத் உடன் மற்ற நாடுகள் நேரடி தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், சீனா கூறி வருகிறது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். திபெத் தொடர்பான இந்த புதிய கொள்கைக்கு, அமெரிக்க பார்லிமென்ட், சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இந்த புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:திபெத்தின் லாசாவில், புதிய அமெரிக்க துாதரகம் திறப்பதற்கான நடவடிக்கைகளை, வெளியுறவு அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்; அதுவரை, அமெரிக்காவில், புதிய சீன துாதரகங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது.
திபெத்தில் அமெரிக்க துாதரகம் திறப்பதற்கு இடையூறாக இருக்கும் சீன அதிகாரிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது.திபெத் புத்த மதத் தலைவராக, 15வது தலாய்லாமாவை, அந்த மதத்தினர் ஒருமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், சீனாவின் தலையீடு இருக்கக் கூடாது. இதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெறும் முயற்சியில், அமெரிக்க வெளியுறவுத் துறை ஈடுபடும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
காந்தி - கிங் ஒப்பந்தம் : மஹாத்மா காந்தி - மார்ட்டின் லுாதர் கிங் ஜூனியர் பெயரில், கல்வியாளர்கள் பரிமாற்றத்துக்காக, அமெரிக்கா - இந்தியா இடையே ஒப்பந்தம் செய்வதற்கான சட்டத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE