மும்பை : மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, அமலாக்கத் துறை மூலம், மஹா., அரசை கவிழ்க்க சதி செய்வதாக, சிவசேனா கட்சி, எம்.பி., சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பி.எம்.சி., வங்கி சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, சஞ்சய் ராவத் மனைவி, வர்ஷா ராவத்தை, இன்று நேரில் ஆஜராகும்படி, அமலாக்கத் துறை 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இது குறித்து, சஞ்சய் ராவத் கூறியதாவது: கடந்த ஓராண்டாகவே, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, புலனாய்வு அமைப்புகள் வாயிலாக மஹாராஷ்டிரா அரசை கவிழ்க்க, முயன்று வருகிறது.
காங்., மற்றும் தேசியவாத காங்., எம்.எல்.ஏ.,க்கள், 22 பேரை மிரட்டி, பதவியை ராஜினாமா செய்ய, இந்த அமைப்புகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த பணிக்கு கொடுத்த, 'கெடு' நவம்பருடன் முடிவடைந்தது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால், தற்போது, சிவசேனா தலைவர்கள் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுக்கும் பணியை, பா.ஜ., துவக்கியுள்ளது. என் மனைவி, 10 ஆண்டுகளுக்கு முன், 50 லட்சம் ரூபாய் கடன் மூலம் வீடு வாங்கினார்.
இது குறித்து, வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான், ராஜ்யசபாவில் அளித்த, பிரமாணப் பத்திரத்திலும், இந்த சொத்து குறித்து குறிப்பிட்டுள்ளேன். இந்த நிலையில், தற்போது, அமலாக்கத் துறை, என் மனைவிக்கு 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. இந்த மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள, பா.ஜ., தலைவர்கள், 120 பேரின் விபரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை சமயம் வரும்போது வெளியிடுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE