-ராகுல், வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், சோனியாவும் பங்கேற்காமல், மூத்த தலைவர்கள் மட்டுமே , காங்கிரஸ் கட்சியின், 136வது ஆண்டு நிறுவன நாளில் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில், ஆண்டுதோறும், டிச., 28ல், டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில், கொடி ஏற்றி, கட்சியின் நிறுவன நாள் கொண்டாடப்படும்.
சேவா தளத் தொண்டர்கள் அளிக்கும் அணிவகுப்பு வகுப்பு மரியாதையை, கட்சித் தலைவர் ஏற்பது வழக்கம். அதன்படி, நேற்று டில்லி அக்பர் சாலையில் உள்ள, தலைமை அலுவலகத்தில், 136வது நிறுவன நாள், கொண்டாடப்பட்டது. வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால், இந்நிகழ்ச்சிக்கு, ராகுல் வரவில்லை.சோனியா மட்டுமாவது வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அலுவலகத்தை அடுத்தே, அவரது வீடு இருந்தும் கூட, உடல்நிலை காரணமாக, அவரும் பங்கேற்கவில்லை. மூத்த தலைவரான ஏ.கே. அந்தோணி, காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் மற்றும் ராஜிவ் சுக்லா உள்ளிட்ட, சில முக்கிய தலைவர்கள் மட்டுமே வந்திருந்தனர்.நடவடிக்கைஇந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான பிரியங்கா கூறியதாவது:டில்லியில் போராடும் விவசாயிகளின் பிள்ளைகள்தான், நாட்டின் எல்லையில், காவல் காக்கின்றனர். அப்படிப்பட்ட குடும்பங்களை, மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது.விவசாயிகளின் போராட்டத்தில், அரசியல் சதி இருப்பதாக கூறுவது, பாவகரமானது. அவ்வாறு பேசுவதை விட்டுவிட்டு, அவர்களின் குறைகளை தீர்க்க, உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
ராகுல் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விகளுக்கு, பிரியங்கா பதிலளிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான சல்மான் குர்ஷித் கூறியதாவது:ராகுல், இந்த நிகழ்ச்சிக்கு வராததற்கு, 101 காரணங்கள் இருக்கும்; அவை எதையும், யாரும் யூகிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராகுல் எது செய்தாலும், அதில் ஒரு அர்த்தம் இருக்கும். பிரியங்கா வந்துள்ளரே, அதுவே, போதுமானதுதான்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, கட்சியின் நிறுவன நாளில் பங்கேற்காமல், ராகுல் வெளிநாடு சென்றதை, பா,ஜ., தலைவர்கள் பலர், சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்திருந்தனர். கீழ்த்தர அரசியல்இதற்கு பதிலாக, காங்., மூத்த தலைவரான, கே.சி. வேணுகோபால் கூறுகையில், ''ராகுல், தன் பாட்டியை காணச் சென்றுள்ளார். ''இதிலென்ன தவறு... தனிப்பட்ட காரணங்களுக்காக, பயணம் மேற்கொள்வது, எல்லாருக்குமே உள்ள உரிமை. அவரை குறிவைத்து, கீழ்த்தரமான அரசியலை, பா.ஜ., செய்கிறது,'' என்றார்.
நிறுவன நாள் குறித்து, 'டுவிட்டரில்' ராகுல் கூறியுள்ளதாவது: நாட்டின் நலனை கட்டிக்காக்கும் பொறுப்பில், காங்கிரஸ் உறுதியுடன் உள்ளது. கட்சியின் நிறுவன நாளான இன்று, உண்மையையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்த உறுதி எடுப்போம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE