செஞ்சி; செஞ்சி பகுதி காட்டுப்பன்றி, குரங்கு, மயில், எலி என நான்கு முனை தாக்குதலில் சிக்கி விவசாயிகள் கடும் மகசூல் இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
மசூலை பாதுகாக்க வேளாண்மைத்துறையினரும், வனத்துறையினரும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் காடு, மலை நிறைந்த பகுதியாக செஞ்சி தாலுகா உள்ளது. அத்தியூர், வெளாமை, தச்சம்பட்டு, பாடிபள்ளம், ஒட்டம்பட்டு, சொரத்துார், தளவானுார், கெங்வரம், தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம், சோ.குப்பம், காரை, பாலப்பட்டு என 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் காடு, மலையை ஒட்டி உள்ளன.கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காடுகளில் சிறுத்தையும், 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கரடியும் இருந்தன. நாளடைவில் இவை அழிந்து விட்டன.
தற்போது முயல், குள்ள நரி, மலைப்பாம்பு, குரங்குகள், பன்றிகள் உள்ளன. சமீபத்தில் மயில்கள் திடீரென அதிகரித்துள்ளது. பன்றிகளை வேட்டையாடும் மிருகங்கள் ஏதும் காட்டுப்பகுதியில் இல்லை.இதனால் பன்றிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் அதிகரித்து விட்டது. இவை காடுகளை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை வேறுடன் கிளறி நெல், கரும்பு, மணிலா பயர்களை நாசம் செய்கின்றன. பகல் நேரத்தில் கூட்டமாக நிலங்களுக்குள் இறங்கும் குரங்குகள் வேர்கடலை, காய்கறி தோட்டங்களில் காய்த்துள்ள பிஞ்சு முதல் முற்றிய காய்கறிகள் வரை கடித்து நாசம் செய்கின்றன.
குரங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற பகல் நேரத்தில் ஒருவர் காவல் இருக்கும் நிலை உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை செஞ்சி பகுதி காடுகளில் மயில்கள் இல்லாமல் இருந்தன. இதற்கு பின் இவற்றின் எண்ணிக்கை நுாற்றுக்கணக்கில் அதிகரித்து விட்டது. இவை முற்றிய நெல் வயல்களில் கதிர்களை அறுத்து நாசம் செய்கின்றன. இதே போல் எலிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதை அழிக்க விவசாயிகள் பெரும் பாடுபட்டு வருகின்றனர். எலிகளுக்கு வைத்த மருந்து கலந்த அரிசியை தின்ற ஆடுகள் இறந்து விட்டன. வறட்சி, மழை, வெள்ளம், புயல், நோய் தாக்குதல் என இயற்கையின் ஒரு பகுதியை சமாளித்து கடும் சிரமத்திற்கு இடையே பயிர் செய்யும் விவசாயிகள், வன விலங்குகள் மற்றும் எலி தொல்லையால் இந்த ஆண்டு பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். செஞ்சி பகுதி விவசாயிகள் இதுவரை இல்லாத இழப்பை இந்த ஆண்டு சந்தித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை வனத்துறை வழங்க வேண்டும். இதற்கான வழிமுறைகள் தெரியாமல் விவசாயிகள் நஷ்ட ஈட்டிற்கு விண்ணப்பிப்பதும் இல்லை.
எனவே, பெரும் இழப்பிற்கு ஆளாகி வரும் விவசாயிகளை பாதுகாக்க வேளாண்மைத்துறையினரும், வனத்துறையினரும் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். 40 சதவீதம் மகசூல் குறைவு வழக்கத்திற்கு மாறாக எலிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பதால் இந்த ஆண்டு நெல் பயிர்களில் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை மகசூல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மின் வேலிஇரவு நேரத்தில் கூட்டமாக வரும் காட்டுபன்றிகளை விரட்டினால் மனிதர்களை தாக்குகின்றன. எனவே பல இடங்களிலும் இப்போது வரை சட்டவிரோதமாக மின் வேலியை அமைத்து வருகின்றனர். இதில் சிக்கி மனிதர்கள் இறக்கும் போது நிலத்தையே விற்று வழக்கில் இருந்து வெளிவரும் பரிதாப நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE