மதுரை : காரில் செல்ல விரும்பும் சாமானிய குழந்தைகளின் கனவை நிஜமாக்கிட 'பெடல் கார்' ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார் மதுரை அண்ணா நகர் ஓய்வு பெற்ற தாசில்தார் ரத்னம்.
'பெடல் காரில் போகலாம், மதுரையை சுற்றி பார்க்கலாம்' என, குழந்தைகள் குஷியாக காரில் வலம் வருவதை பார்த்து நெகிழ்கிறார் இந்த 90 வயது இளைஞர்.
ரத்னம் கூறியதாவது: தாசில்தாராக பணியாற்றி 1987ல் ஓய்வு பெற்று சிவகங்கை படமாத்துார் சர்க்கரை ஆலை அமைக்கும் பணிக்கு உதவினேன். தொடர்ந்து பல இடங்களில் பணியாற்றி ஓய்வில் இருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சூழல் மாசடையாத வகையில் ஒரு பெடல் காரை தயாரித்து வாங்கி குசவபட்டியில் என் அறக்கட்டளை வளாகத்தில் வைத்தேன். இங்கு வரும் குழந்தைகள் பெடல் கார், ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்கிறார்கள்.
முதல் காரை மையமாக வைத்து சமீபத்தில் மீண்டும் ஒரு பெடல் காரை மதுரை சைக்கிள் கம்பெனி ஒன்றில் தயாரித்து வாங்கினேன். இந்த காரின் முன் இருவர் அமர்ந்து பெடல் செய்ய, பின்னால் 6 சிறுவர்கள் அமர்ந்து பயணிக்கலாம். ரூ.25,000 மதிப்பில் தயாரித்த காரை சிறப்பு குழந்தைகள் பூங்காவிற்கு இலவசமாக வழங்கினேன். அடுத்து ஒரு மாற்று திறனாளி, பெடல் செய்வதற்கு ஒருவர் அமர்ந்து பயணிக்கும்படி, ஓரளவு வேகம் செல்லும் பெடல் கார் தயாரிக்க உள்ளேன். நினைத்த இடத்திற்கு குழந்தைகளுடன் சென்று வர இந்த கார் உதவும், என்றார். தொடர்புக்கு 98410 39924
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE