மதுரை : மதுரை கள்ளழகர் கோயில் பெயருடன் சேர்த்து, சோலைமலை முருகன் கோயில் பெயரையும் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.
மதுரை சோமசுந்தரம் தாக்கல் செய்த மனு:மதுரை அழகர்மலையில் சோலைமலை முருகன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை இணையதளத்தில் கள்ளழகர் கோயில் மட்டும் இடம் பெற்றுள்ளது. அதனுடன் சேர்த்து சோலைமலை முருகன் கோயிலும் இடம் பெற வலியுறுத்தி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சோம சுந்தரம் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதார் தரப்பு, 'சோலைமலை முருகன் கோயில் மண்டபமானது கள்ளழகர் கோயில் தேவஸ்தானத்துடன் சேர்ந்தது என இந்நீதிமன்றம் ஒரு வழக்கின் அடிப்படையில் உத்தரவிட்டது. ஆனால் இணைய தளத்திலிருந்து சோலைமலை முருகன் கோயில் பெயரை நீக்கிவிட்டனர். மனு அளித்தும் நடவடிக்கை இல்லை,' என தெரிவித்தது.
நீதிபதிகள் உத்தரவு: கள்ளழகர் கோயில் மற்றும் அத்துடன் சோலைமலை முருகன் கோயிலுக்கும் சேர்த்து பரம்பரை அல்லாத அறங்காவலர் நியமனம் தொடர்பாக 2009ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சோலைமலை முருகன் கோயில் சொத்துக்கள் கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமானது என இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கள்ளழகர் கோயில் பெயருடன் சேர்த்து, சோலைமலை முருகன் கோயில் பெயரையும் இணையதளத்தில் வெளியிட வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. அவ்வாறு இடம்பெறச் செய்ய வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE