தமிழ்நாடு

பாதுகாக்கப்படுமா? - ஆற்றில் பெருகிய மணல் வளம்...சுரண்ட காத்திருக்கும் கும்பல்

Added : டிச 29, 2020
Share
Advertisement
தியாகதுருகம் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையின் போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதிகரித்துள்ள மணல் வளத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வழியே தென்பெண்ணை, மணிமுக்தா, கோமுகி, கெடிலம், மயூரா ஆகிய ஆறுகள் செல்கின்றன.சாத்தனுார் அணை திறக்கப்படும் போதும், மாவட்டத்தில் கனமழை பெய்யும் தருணங்களிலும் தென்பெண்ணை

தியாகதுருகம் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையின் போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதிகரித்துள்ள மணல் வளத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வழியே தென்பெண்ணை, மணிமுக்தா, கோமுகி, கெடிலம், மயூரா ஆகிய ஆறுகள் செல்கின்றன.சாத்தனுார் அணை திறக்கப்படும் போதும், மாவட்டத்தில் கனமழை பெய்யும் தருணங்களிலும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.கல்வராயன் மலையில் கனமழை பெய்தால் கோமுகி, மணிமுக்தா அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்வது கேள்விக்குறியாகி விட்டது.இதனால் நீரோட்டம் இன்றி வறண்டு கிடக்கும் ஆற்றில் இருந்த மணல் வளம் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீர்மட்டத்தை தக்க வைப்பதில் ஆற்றின் மணல் பரப்பு பெரும் பங்கு வகிக்கிறது.இதனால் ஆற்றுப்படுகையில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு விவசாயம் செழிக்க காரணமாக உள்ளது.சில ஆண்டுகளாக சமூக விரோத கும்பல் முறைகேடாக தொடர்ந்து மணலை அள்ளிச் சென்றதால் ஆறுகள் கட்டாந்தரையாக மாறியது.இதற்கு சில அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதால் மணல் திருட்டைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.தொடர் மணல் திருட்டால் மணல் அள்ளப்பட்ட இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆறு முழுதும் காடுபோல் காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு பருவமழை மாவட்டத்தில் நன்கு பெய்துள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் மணல் வளம் பெருகியுள்ளது.

தற்போது, ஆற்றில் தண்ணீர் குறைந்து தரை பரப்பு தெரிய துவங்கியதால் அதில் படிந்துள்ள மணலை அள்ளிச் செல்ல சமூக விரோத கும்பல் தயாராகி வருகிறது.சில ஆண்டுகளாக ஆற்றில் மணல் எடுக்க கடும் கட்டுப்பாடு உள்ளதால் கட்டுமானப் பணிக்கு மணலை பயன்படுத்துவது அரிதாகி விட்டது.அதற்கு மாற்றாக 'எம் சாண்ட்' பயன்படுத்தப்பட்டு வருகிறது.இது மணலைப் போன்று கட்டுமானத்திற்கு உறுதித் தன்மையுடன் இல்லை என சிலர் கருதுவதால் மணலை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கின்றனர்.இத்தருணத்தில் ஆற்றில் பெருகியுள்ள மணலை அள்ளி கொள்ளை லாபத்திற்கு விற்று பணமாக்க மணல் திருட்டு கும்பல் களமிறங்கியுள்ளது.

இதற்காக சில அதிகாரிகளை சரிகட்டும் முயற்சியும் நடந்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்கும் விவசாயத்திற்கு மூலாதாரமாக உள்ள ஆறுகளை பாதுகாப்பது அவசியமாகும்.இதை உணர்ந்து ஆறுகளில் மணல் திருடுவதை துவக்கத்திலேயே கண்காணித்து கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆற்று மணலைப் பாதுகாக்க முடியும்.மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீதும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X