-திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வரலாற்று பொக்கிஷங்களைக் கொண்டது என்பதை நக்கன் புள்ளன் கல்வெட்டு, மலைக்கோட்டை, ஐவர் மலை என பலவற்றின் வாயிலாக தெரிகிறது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள அருவிகள், ஆறுகள், குளங்கள் போன்றவையும் வரலாறுகளை சுமந்து கொண்டுள்ளன. இதில் நங்காஞ்சியாற்றின் வரலாறு சிறப்பானது.
நல்காசிநாதர் ஆலயம்
வடக்கே காசிக்கு நிகராக உள்ளதுதான் நம்மூரு நல்காசி. ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி அருகே 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது 'நல்காசிநாதர்' எனும் சிவன் கோயில். சிறிய குடிசை வீடு போன்ற அமைப்பில் பிஸ்கட் போன்ற செங்கல்களால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள லிங்கம் 1000 ஆண்டுகள் பழமையானது என்கின்றனர்.இந்நாட்களில் பிரதிஷ்டை செய்யப்படும் சுவாமி சிலைகள் பெரிதாக இருக்கும் என அனைவரும் அறிந்தது. ஆனால், முற்காலங்களில் கற்பகிரகங்கள் மற்றும் சுவாமி சிலைகளை சிறியதாகவே செய்துள்ளனர்.
இங்குள்ள லிங்கம் இராமேஸ்வரத்தில் உள்ள லிங்கத்தைப் போல சிறியதாகவே இருக்கிறது. ஆனால், இதனை தூக்குவதென்பது கடினமான விஷயம் என்கின்றனர் அப்பகுதியினர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோயிலை கடந்து தான் நல்காசிநாதரை தரிசிக்க முடியும். இக்கோயிலும் 12ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை அதன் அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்த பெருமாளை தரிசிக்க பல முனிவர்கள் வந்து சென்றதாக கூறுகிறது வரலாறு.
மூலிகை மரங்கள், செடிகள் என சுற்றிலும் இருப்பதால் சித்தர்கள் இங்கு வாழ்ந்ததை உணர முடிகிறது.
மக்கள் நம்பும் வரலாறு
முற்காலத்தில் இறந்து போனவர்களின் அஸ்தியை கரைப்பதற்காக தென்மாவட்டங்களில் இருந்து காசிக்கு சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்கள் விருப்பாட்சி அருகே அமர்ந்து இளைப்பாறும் நேரத்தில் அஸ்தி மல்லிகை மலராக மாறியுள்ளது. அதேநேரம் அங்கு வந்த முனிவர், 'காசிக்கு இணையானவர் இங்குள்ள நல்காசிநாதர். அங்கு போய் அருவி நீரில் கரைத்துச் செல்லுங்கள்' என்று கூறி மறைந்தாக கூறப்படுகிறது.
அன்று முதல் காசி நீரைப் போலவே, நல்காசிநாதர் கோயில் அருகே உள்ள அருவி நீரும் கருதப்படுகிறது. இதன் நீட்சியாகவே இன்றும் ஏராளமானோர் இங்கு வந்து முன்னோரை வழிபட்டு, காசிநாதரை தரிசித்துச் செல்வது பாரம்பரியமாக நடக்கிறது.
நல்காசி எனும் நங்காஞ்சியாறு
ஒட்டன்சத்திரம் மலையில் உள்ள பரப்பலாறு அணைக்கு பாச்சலூர், வடகாடு, புலிக்குத்திகாடு போன்ற பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வெளியேறும் நீர் மலைக்குன்றுகள் வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது. பல நூறு அடிகள் உயரத்தில் இருந்து தண்ணீர் பாய்வதால் பார்ப்போரை பரவசப்படுத்துகிறது. இந்தநீர் நல்காசிநாதர் ஆலயத்தில் கீழ் தலையூற்று அருவிக்கு வந்து ஆறாக பாய்கிறது.
இந்த அருவியும், ஆறும் பெயர் மருவி, நங்காஞ்சியாறாக தொடங்குகிறது. இது 300 க்கும் அதிகமான மூலிகைச் செடிகளைத் தழுவிச் சென்று கீழ்தலையூற்றில் சங்கமிக்கிறது.போர் பயிற்சிகள்ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட காலத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் இந்த பகுதியில் தங்கி இருந்தார், கோபால்நாயக்கரின் படைகள் இங்கு பயிற்சிகள் மேற்கொண்டன என்று வரலாறுகள் கூறுகின்றன. வீரர்கள் பயிற்சி எடுப்பதற்கு ஏற்றவாறு இப்பகுதி மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
மலை மீது இருந்து பார்த்தால் கீழே இருப்பவர்களுக்குத் தெரியாது. மூன்று பக்கம் மலையும் ஒரு பக்கம் பாதையும் கொண்டதாக, இயற்கை பாதுகாப்புடன் அமைந்துள்ளது. சிறப்பான இந்த பகுதிகளையும் இன்று சிலர் பாழ்படுத்துகின்றனர். தர்ப்பணம் செய்ய வருவோர் பொருட்கள், ஆடைகளை அப்படியே போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியே குப்பை கூளமாக கிடக்கிறது. பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால் நீர் பெருக்கெடுக்கையில் தவறி விழுந்தால் உயிரிழப்பு நிச்சயம்.
இதனை சரியாக பராமரித்தால் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றலாம். அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் குடும்பத்தோடு வந்து பொழுதைக் கழிக்கவும், சோர்வை போக்கவும் உதவியாக இருக்கும்.- தி.ஆறுமுகப்பாண்டிபடம்: கே.மணிகண்டன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE