பொன்னேரி - நோயா, பூச்சி தாக்குதலா என, தெரியாத நிலையில், மூன்று கிராமங்களில், 300 ஏக்கர் பரப்பில், நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.பொன்னேரி அடுத்த, தொட்டிமேடு, புதுச்சேரிமேடு, சிரளப்பாக்கம் ஆகிய கிராமங்களில், 300 ஏக்கர் பரப்பில், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு உள்ளது.நிலத்தடி நீர் உவர்ப்பால், ஏரிப் பாசனம் மற்றும் மழையை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம், 'நிவர்' புயலுக்கு முன் வரை நெற்பயிர்கள் சீரான வளர்ச்சியில் இருந்தன.புயல் எதிரொலியாக, தொடர்ந்து 10 தினங்கள் மழை பொழிவு இருந்தால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மழைவிட்ட பின், விளைநிலங்களில் இருந்த தண்ணீர் வடிந்தன.அதே சமயம், பயிர்கள் சரியான வளர்ச்சியில்லாமல், காய்ந்து கருகியதுடன், நெற்கதிர்கள் பதராகி மாறி வருகின்றன.புகையான் தாக்குதலா அல்லது பூச்சி தாக்குதலா என, தெரியாமல் விவசாயிகள் குழப்பம் அடைந்தனர். மருந்து கடைகளில் கொடுத்த மருந்துகளை தெளித்தும், பயிர்கள் வளர்ச்சியில்லாமல் இருக்கிறது. அடுத்தடுத்த விளைநிலங்களுக்கு, இந்த பாதிப்பு பரவி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.இது குறித்து புதுச்சேரிமேடு கிராம விவசாயி எம். முருகன் கூறியதாவது:நன்கு வளர்ந்து வந்த நெற்பயிர்கள் திடீரென காய்ந்து கருகுகின்றன. இதுவரை, மூன்று முறை மருந்து தெளித்து விட்டோம். மருந்திற்கு மட்டுமே, ஏக்கருக்கு, 5,000 ரூபாய் வரை செலவாகி உள்ளது.பாதிப்பு குறையவில்லை. நோயா, பூச்சி தாக்குதலா என, தெரியவில்லை. வேளாண் துறையினரும் வந்து பார்வையிட்டு சென்று உள்ளனர். இனி பயிர்கள் பழைய வளர்ச்சியை அடைவதற்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE