கோவை : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, நான்கு லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களை சந்திக்க, தமிழகத்தில் 50 லட்சம் குடும்பங்களை சந்திக்க விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுசெயலாளர் மிலிந்த் பராண்டே, கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தி ராமஜென்ம பூமியில் அமையும் கோவில், கோடிக்கணக்கான மக்களின் பக்தியின் அடையாளமாக விளங்குவதோடு, ஹிந்துக்களின் பெருமையாகவும் விளங்குகிறது. 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், ஐந்து கோபுரங்கள் மற்றும் மூன்று தளங்களுடன், ராமர் கோவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவில் கட்டுமான பணியில் நாடு முழுக்க உள்ள பக்தர்கள் தங்களின் பங்களிப்பை அளிக்கும் வகையில், 'ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' அறக்கட்டளை, விஷ்வ இந்து பரிஷத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக, ஜன.,15 மகர சங்கராந்தி முதல் மாசி பவுர்ணமி நாளான பிப்.,27 வரை மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடக்கிறது. கோவில் கட்டும் பணியில் பக்தர்கள் எவ்வாறு பங்கேற்க முடியும் என்பதை விளக்குவதுடன், அவர்களிடமிருந்து நன்கொடைகளும் பெறப்படும்.

அதன் வெளிப்படைதன்மையை உறுதி செய்யும் வகையில், 10 ரூபாய், 100 ரூபாய், 1,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் மற்றும் ரசீது புத்தகங்களை தன்னார்வலர்கள் வழங்குவர். இந்த மக்கள் தொடர்பு திட்டத்தின் வாயிலாக, நான்கு லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களை தொடர்பு கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 ஆயிரம் ஊராட்சிகளில், 5,000 வார்டுகளில், 50 லட்சம் குடும்பங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 90 ஆயிரம் தொண்டர்கள், இப்பணியில் ஈடுபடுவர். காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பேரூராதீனம் மருதாசல அடிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ மடாதிபதிகள், ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான நிதி சேகரிப்பு இயக்கத்தில் பங்கேற்று, அனைத்து ஹிந்து சமுதாய மக்களிடமும், கோவில் குறித்த தகவல்களை கொண்டு செல்வர். இவ்வாறு, மிலிந்த் பராண்டே கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE