காஞ்சிபுரம்; காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை கழிவு நீர் கால்வாயில், தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள, சிற்ப வேலைபாடுகளுடன் காணப்படும் கல் துாண்களை, அறநிலையத் துறை அதிகாரிகள் ஆராய வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை மின் வாரியம் பின்புறம், கழிவு நீர் கால்வாய் செல்கிறது. அந்த இடத்தில், பழங்கால கல் துாண்கள் கிடக்கின்றன.இவற்றில் சில துாண்கள், சிற்ப வேலைபாடுகளுடன் காணப்படுகின்றன. இது, புராதன கோவில்களில் பயன்படுத்தப்பட்ட கல் துாண்களாக இருக்கலாம்.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள இரட்டை திருமாளிகை, 100 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. அதை சீரமைக்க, மூன்று ஆண்டுகளுக்கு முன், அறநிலையத் துறை நிதி ஒதுக்கி, பணி துவங்கப்பட்டது. அப்போது அகற்றப்பட்ட கல் துாண்களாக, அவை இருக்கலாம் என, கூறப்படுகிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பஞ்சுப்பேட்டை கழிவு நீர் கால்வாயில், பெரிய கல் துாண்களை வைத்து, தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கல் துாண்கள், ஏகாம்பரநாதர் கோவில் இரட்டை திருமாளிகையில் பயன்படுத்தியதாக இருக்கலாம் என, கருதுகிறோம்.திருமாளிகை இடிந்த மண்டபத்தில் கிடந்த பழைய கல் துாண்கள், சிலவற்றை காண வில்லை என, பக்தர் ஒருவர், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டது.இதையடுத்து, திருமாளிகை கட்டுமான பணி நிறுத்தப்பட்டு, இந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.இது சம்பந்தமாக, ஏகாம்பரநாதர் கோவிலில், பணியாளர்கள் மற்றும் புகார்தாரர்களிடம், கடந்த வாரம், போலீசார் விசாரணை செய்தனர்.கோவில் கல் துாண்கள், கால்வாயில் பயன்படுத்தப்பட்டது ஏன், கோவில் துாண்களை, வளர்ச்சி திட்ட பணிக்கு பயன்படுத்தியது குறித்து, போலீசாரும், அறநிலையத் துறையினரும் முறையாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE