புழல்; சேதமடைந்துள்ள மாநகராட்சி சாலையை சீரமைக்க கோரி, பொதுமக்கள் கையெழுத்து பதிவு போராட்டம் செய்தனர்.சென்னை, புழல் அடுத்த மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு - வடபெரும்பாக்கம் ரேஷன் கடை வரை, 1 கி.மீ., துார மாநகராட்சி சாலை, மிக மோசமாக சேதமடைந்துள்ளது.அந்த சாலையை சீரமைக்க, பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம், ஓராண்டாக கோரி வந்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் நீடித்த பருவ மழையால், அந்த சாலை மேலும் சேதமடைந்தது.அதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டனர். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், வடபெரும்பாக்கம், ராவல் கன்னியம்மன் கோவில் அருகே, நேற்று காலை, 9:00 மணி அளவில், விழிப்புணர்வு கையெழுத்து போராட்டம் நடத்தினர்.அப்போது, அங்குள்ள மக்கள், புகார் விளம்பர பேனரில், தங்களது கையெழுத்துக்களை பதிவு செய்தனர். இது குறித்து, தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், தற்காலிக நடவடிக்கையாக, 'எம் - சாண்ட்' மண் கொட்டி, சாலை பள்ளங்களை மூடும் பணியில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE