விளம்பர பட நடிகரின் பைக் பறிப்புதிருவேற்காடு: திருவேற்காடைச் சேர்ந்தவர் மகாமாருதி, 20; விளம்பர படங்களில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மாதிராவேடு அருகே சென்ற போது, அவரை வழி மறித்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி, அவரதுஇருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றனர். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.கடையின் பூட்டை உடைத்து திருட்டுமாங்காடு: முகலிவாக்கம், வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம், 45; அதே பகுதியில் ஆட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, வழக்கம் போல் கடை திறக்க சென்றபோது, பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவிலிருந்த, 7,000 ரூபாய் மற்றும், ஏழு ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.பல் மருத்துவர் தற்கொலை முயற்சிவளசரவாக்கம்: வளசரவாக்கத்தைச் சேர்ந்த, பல் மருத்துவரான, 25 வயது இளம்பெண், நேற்று மதியம் திடீரென துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது பெற்றோர், தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில், காதலன் மொபைல்போன் எடுக்காததால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஊர்க்காவல் படை வீரருக்கு உதைராயபுரம்: வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில், நேற்று முன்தினம் இரவு, ராயபுரம் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் ஊர்காவல்படை வீரர் ராஜ்கண்ணு, 32, ஆகியோர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, எம்.சி., சாலை, மதினா துணிக்கடை அருகே, நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை, உதவி ஆய்வாளர் கலைந்து போக அறிவுறுத்தியுள்ளார். அவர்கள், கலையாமல் அங்கேயே நிற்கவே, ஊர்காவல் படை வீரர் ராஜ்கண்ணு, வாகனத்தை விட்டு இறங்கி சென்று, அவர்களை கலைந்து போக சொல்லியுள்ளார். போதை ஆசாமிகள், 'எங்களுக்கு தெரியும், நீங்க போங்க' என, விதண்டாவாதமாக பேசினர். சிறிது நேரத்தில், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த கும்பல், ராஜ்கண்ணுவை தாடையில் தாக்கினர். சுதாரித்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட, பழையவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கிரண்ராஜ், 31, ஜெயகுமார், 26, ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து கோயம்பேடு: கோயம்பேடு, சின்மயா நகரில் ஓட்டல் நடத்தி வருபவர் மணிகண்டன், 40. நேற்று முன்தினம் இரவு, ஓட்டலுக்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், ஊழியரிடம் வீண் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைபார்த்த மணிகண்டன், தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த நான்கு பேரில் ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை வெட்டியுள்ளார். கோயம்பேடு போலீசார், தகராறில் ஈடுபட்டவர்களில் ஒருவரை மடக்கி பிடிக்க, மற்றவர்கள் தப்பினர். பிடிபட்டவர், அதேபகுதியைச் சேர்ந்த மணி, 30, என்பது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.கஞ்சா, மாவா விற்றவர்கள் சிக்கினர்கோயம்பேடு: கோயம்பேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு, மேட்டுகுளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.அவர், கே.கே.நகரைச் சேர்ந்த சிந்தன், 30 என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 300 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். யானைக்கவுனி, வடக்கு கோட்டை பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா எனும் போதை பொருள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் நேற்று காலை, 7:30 மணியளவில், அந்த கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 150 மாவா பாக்கெட்டுகள் சிக்கின. அந்த கடையை நடத்தி வரும், ஏழுமலை, 47 என்பவரை கைது செய்தனர்.திருவொற்றியூர், இளைய முதலி தெருவில், கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கொருக்குப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மண்ணடி, அங்கப்பன் நாயக்கர் தெருவைச் சேர்ந்த சதீஷ், 20 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சிக்கினர். இவர்களிடம், 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேரையும் கைது செய்தனர். சதீஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொருவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.சூதாடிய 16 பேர் சுற்றிவளைப்புதுரைப்பாக்கம்: துரைப்பாக்கம், கஸ்டம்ஸ் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு, போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தபோது, கணேஷ், 70, மணி, 54, உள்ளிட்ட, 16 பேர் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 1.89 லட்சம் ரூபாய் மற்றும் 20 சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.நகை திருடியவர் சிக்கினார்செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கிரிஸ்டி, 53. மார்ச்சில், இவர் வெளியூர் சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்து, 11 சவரன் நகை திருடப்பட்டது.செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 21, என தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு, இவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, 11 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE