கீழ்ப்பாக்கம் - தன் மீது நடவடிக்கை மேற்கொண்ட போக்குவரத்து போலீசாரை பழிவாங்க, ரோந்து வாகனத்தை கடத்தி, தப்ப முயன்ற தனியார் மருத்துவமனை டாக்டர் கைது செய்யப்பட்டார்.கீழ்ப்பாக்கம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசங்கரன், தலைமை காவலர் சுந்தர் ஆகிய இருவரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஈகா திரையரங்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த, 'டாடா டிகோ' காரை மடக்கி, வாகன ஓட்டுனரை மது அருந்தியுள்ளாரா என பரிசோதனை செய்தனர். இதில், அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.அவர் குறித்து விசாரித்ததில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவிக்னேஷ், 31, என்பதும், குன்றத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர். பின், வாகன தணிக்கை முடித்து, சிக்னல் அருகே நிறுத்தக் கோடு வரைந்து கொண்டிருந்தனர். அந்நேரத்தில், முத்துவிக்னேஷ், தன் மீது நடவடிக்கை மேற்கொண்ட போலீசாரை பழிவாங்கும் நோக்கத்துடன், போலீசாரின் ரோந்து வாகனத்தை எடுத்து தப்ப முயன்றார்.இதைப்பார்த்த போலீசார், அவ்வழியாக சென்ற மற்றொரு காரில் ஏறிச் சென்று, முத்துவிக்னேஷை மடக்கி பிடித்தனர். பின், காவலர் சுந்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில், டாக்டர் முத்து விக்னேஷை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE