கூடைப்பந்து விளையாட்டில், சரியான படி கூடையில் பந்து விழுந்தால் தான் பாயின்ட்ஸ். இதற்கும், இசை விமர்சனத்துக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. சிக்கல் குருசரண் தேர்ந்தெடுத்த விருத்தத்தையும், அதைத் தொட்டடுத்து வந்த பாடலையும் கேட்போருக்கு, இந்த விளையாட்டு தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பொருத்தம். விருத்தம், கம்பராமாயணப் பாடலான, 'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே' சென்றடைந்த பாடலோ, தஞ்சாவூர் சங்கர ஐயரின், 'ராமநாமமே துதி மனமே' என்பதாகும். தெரிந்து பழக்கப்பட்ட பாடல் தான்! ஆனால், இந்த விருப்பமான விருத்தத் தேர்வு தான் குருசரணை அதி சமர்த்தராக்கி விட்டது.ஒரு ஒன்றரை மணி நேரக் கச்சேரியில், எத்தனை பாடல்களைப் பாடலாம்? விடை, விமர்சனத்தின் இறுதியில்! குருசரண் ஆரம்பித்தது லால்குடி ஜெயராமனின் நீலாம்பரி ராக வர்ணத்துடன். அடுத்து, வராளியில், 'மாதிரி' ஆலாபனைக்குப் பிறகு, சேஷாசல நாயகம் என்ற தீக் ஷிதரின் பிரபலம், அதற்கு அரவிந்த பத்ர நயனம் எனும் வரிக்கு நெரவல்.'ராமா! உன்னை எங்கு நான் தேடுவேன்' என்ற பொருள்படும், 'நேநெந்து வெதகுது ரா' எனும், கர்நாடக பெஹாகில் அமைந்த, தன்னையே தியாகராஜர் நொந்து கொள்ளும் பாடல் அடுத்ததாக. குருசரண் செட்டில் ஆனது சாவேரியில். இதற்கான ஆலாபனையில் விசேஷமென்ன? பிருகாக்கள் வந்தன. அதில், பிணைத்துக் கொண்டது போலவே வந்த, நீளக் கார்வைகள் கொண்ட ஸஞ்சாரங்களும் வந்தன. குரல் ஒரு வேலைப்பாட்டிலிருந்து, இன்னொரு வேலைப்பாட்டை நோக்கி அவ்வளவு எளிதாகச் சென்றது. இதேபோல, மேல் ஸ்தாயியில் பாடும் பொழுது, ஒரு நிதானத்தைக் குரலில் இவரால் கொண்டு வர முடிந்தது. பாடல், ஸ்ரீ ராஜகோபால எனும் தீக் ஷிதர் கிருதி.இதற்கடுத்து, ஏற்கனவே சொன்னது போல விருத்தப் பொருத்தம்.கடைசியில், இரண்டு துக்கடாக்கள். ஒன்று, எளிதில் எல்லோரும் முணுமுணுக்கக் கூடிய சிவனின், 'மனமே கணமும் மறவாதே' யும், மற்றது சிந்துபைரவியில் ஒரு ஊத்துக்காடு வெங்கடகவியின் தில்லானா. எத்தனை பாடல்கள்? கணக்காகி விட்டதா? என் கணக்குப்படி ஏழு!வயலினிஸ்ட் சஞ்சீவ் கமகங்கள் குழையும் ஆலாபனைக் கிரமத்தில், தன்னையும், ரசிகர்களையும் மூழ்கித் திளைக்க வைத்தார். ஒரு பிரயோகத்தின் உள்ளுக்குள் ஊடுருவி ஊடுருவி, ஆழத்தை அடைதல்! இந்த அணுகுமுறை இவரிடம்! ஸ்வரங்களிடும் வேளைகளில், குருசரணின் போக்குகளைப் பின்பற்றி வாசித்தார். தனியாவர்தனத்தின் போது, மிருதங்கத்தில் சீனியரான கேவி பிரசாத், இளைஞரான கஞ்சிரா வாசித்த சுனில் குமாருடன் இணையும் போதும், மற்ற நேரத்திலும், அவருக்கு உரிய இடமும், வாய்ப்பும் அளித்து, அதே சமயம், தன் தனிப்பட்ட வாசிப்பின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வாசித்தது ஒரு தனிக்கலையாகவே பட்டது. -எஸ். சிவகுமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE