சென்னை - சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், இரண்டு முதியோருக்கு, மிகவும் சிக்கலான அறுவை இல்லா இதய வால்வு மாற்று சிகிச்சை செய்யப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னையைச் சேர்ந்த, 74 வயது நபர், சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.அவரை பரிசோதித்த ஒரு மருத்துவமனையில், 'இடியோபாதிக் திரோம்போசைட்டோபெனிக் பர்புரா' என்ற, பெருநாடியில் இருந்து, இடது, 'வெண்ட்ரிக்' கிளை பிரிக்கும் வால்வு மிகவும் குறுகியிருந்தது கண்டறியப்பட்டது. அவரது வயது மற்றும் ரத்தக் கோளாறு பிரச்னை காரணமாக, அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அம்மருத்துவமனை முன்வரவில்லை. இதையடுத்து, ராமச்சந்திராவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவக் குழுவினர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 24.5 மி.மீ., வால்வை, மார்பை திறக்காமல் காலின் ரத்த குழாயின் வாயிலாக, சிறுதுளை அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்தினர். சிகிச்சைக்கு பின், இரண்டு நாட்களில் நலம்பெற்று, அவர் வீடு திரும்பினார். இதுபோன்று ரத்த நோயை கொண்ட நோயாளிக்கு, சிறுதுளை வழியாக வால்வு மாற்று சிகிச்சை, தென்மாநிலங்களில் முதன் முறையாக, ராமச்சந்திரா மருத்துவமனையில் தான் செய்யப்பட்டுள்ளது.மற்றொரு, 64 வயது நபர், சில நாட்களாக நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.அவருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன், பெருநாடி வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, உயிரி செயற்கை, 'அயோர்டிக் வால்வு' பொருத்தப்பட்டுள்ளது. அவரை பரிசோதித்ததில், அவரது செயற்கை வால்வு மறுபடியும் செயலிழந்து, அதிகமாக சுருங்கி உள்ளது தெரிய வந்தது. மேலும், அவரது இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குருதி நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.இதனால், இரண்டாவது முறை திறந்த அறுவை சிகிச்சை என்பது, முதல்முறை செய்வதை விட, அதிக ஆபத்தை கொண்டது.எனவே, அவரது பிற மருத்துவ பரிசோதனைக்கு பின், தொடை வழி சிறுதுளை வாயிலாக, வால்வு மாற்று சிகிச்சை மற்றும் ரத்தநாள அடைப்புக்கு, 'ஆன்ஜியோ பிளாஸ்டிக்' வாயிலாக சீர் செய்யப்பட்டது. இந்த வால்வு நான்றாக விரியக்கூடியது என்பதால், நோய் தாக்குதல் குறைவு, ஆயுள்காலம் அதிகம். இந்த சிகிச்சைகளை, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நாகேந்திர பூபதி தலைமையிலான டாக்டர்கள் மேற்கொண்டனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE