அன்னுார்:'அத்திக்கடவு திட்டத்தில், 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன' என, விழாவில் தெரிவிக்கப்பட்டது.காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி, கதவுகரையில், ஒன்றிய பொது நிதியில், 7 லட்சம் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் வரவேற்றார்.தொட்டி கட்டுவதால், கீழ் கதவுகரை, மேல் கதவுகரை, சாமிநாதபுரம், கெம்பநாயக்கன்பாளையம் ஆகிய ஐந்து கிராமங்கள் பயன் பெறும். பணியை துவக்கி வைத்த, ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி பேசியதாவது:அத்திக்கடவு திட்டம் உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்துக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. நீரேற்று நிலையங்கள் கட்டும் பணி, குழாய் பதிக்கும் பணி ஆகியவை, 50 சதவீதம் முடிந்துள்ளன. வரும் ஏப்ரல் மாதத்துக்குள், அன்னுார் குளங்களுக்கு நீர் விடப்படும். ஒரு சிலர், அத்திக்கடவு திட்டத்தில், அன்னுார் குளங்களுக்கு நீர் வராது என தவறான பிரசாரம் செய்கின்றனர். ஏற்கனவே, அன்னுாரில் தனியார் நிறுவனத்துக்கு, ஈரோட்டில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன மோட்டார்கள் மூலம் நீர் உந்தப்படுகிறது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட நீர் அனைத்து குளம், குட்டைகளில் நிரப்பப்படும், இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் விடுபட்ட குளங்களும் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்படும் என அமைச்சர் வேலுமணி உறுதி அளித்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.ஊராட்சி தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் குருந்தாசல மூர்த்தி முன்னிலை வகித்தனர். பா.ஜ., ஒன்றிய தலைவர் விஜயகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர் மயில்சாமி, அமைப்புசாரா அணி ஒன்றிய தலைவர் விஜயகுமார், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE