மேட்டுப்பாளையம்:'மேட்டுப்பாளையம் தொகுதியில், ஐம்பது ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள், ஐந்து ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் வேலுமணி பேசினார்.மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சி, ராமம்பாளையத்தில், 'அம்மா மினி கிளினிக்' திறக்கப்பட்டது. தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, கிளினிக்கை திறந்து வைத்து பேசியதாவது:கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் தொகுதியில் தான் அதிக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வர் பழனிசாமி, கொரோனா காலத்தில், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்தார். ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, தமிழகத்தில், 2,000 கிராமங்களில், 'அம்மா மினி கிளினிக்' திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.கோவை மாவட்டத்தில், 70 இடங்களிலும், மேட்டுப்பாளையம் தொகுதியில், இரண்டு இடங்களிலும், 'அம்மா மினி கிளினிக்' திறக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கிளினிக்கிலும், ஒரு டாக்டர், செவிலியர், உதவியாளர் என, மூவர் இருப்பர். இங்கு, காய்ச்சல், சளி உட்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். மேட்டுப்பாளையம் தொகுதியில், 50 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய பணிகள், 5 ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கடந்த, 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த, அத்திக்கடவு -- அவினாசி திட்டத்தை, தமிழக முதல்வர் நிறைவேற்றி பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 50 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு, விரைவில் அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு, அமைச்சர் பேசினார்.கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் சின்னராஜ், அருண்குமார், முன்னாள் எம்.பி., செல்வராஜ், மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE