தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம், தமிழகத்தில் இன்னும் கூட்டப்படவில்லை. அதனால் தான், முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. முறைப்படி, முதல்வர் வேட்பாளரை, பா.ஜ., தான் அறிவிக்கும்.
- பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலர் வானதி சீனிவாசன்
'நீங்கள் சொல்வதிலும், கொஞ்சம், 'லாஜிக்' இருக்கிறது. எப்படியோ, இ.பி.எஸ்.,சை தானே, முதல்வர் வேட்பாளராக, பா.ஜ., தலைமை அறிவிக்கப் போகிறது; வேறு யாருமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலர் வானதி சீனிவாசன் பேட்டி.
தமிழக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசும் நடவடிக்கையை, தமிழக கல்வித் துறையே மேற்கொண்டதை விட, அ.தி.மு.க., அரசுக்கும், தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கும் மிகப்பெரிய அவமானம் வேறு இருக்க முடியுமா?
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
'இதில் என்ன அவமானம் இருக்கிறது... ஓவராக மக்களை துாண்டி விடாதீர்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.
அ.தி.மு.க.,வில் மட்டும் தான், கொடி பிடிக்கும் சாதாரண தொண்டன் கூட, முதல்வராக முடியும். எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இன்றும் இருக்கும்; நாளையும் இருக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்டதும், மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்.
- அமைச்சர் ஜெயகுமார்

'அப்படி, எந்த சாதாரண தொண்டருக்கு, முதல்வர் பதவியை கொடுத்துள்ளீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.
தி.மு.க., நடத்தி வந்த கிராம சபை கூட்டத்தில், அ.தி.மு.க.,வை புறக்கணிக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததை அடுத்து, அந்த கூட்டத்தை தடை செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை வாபஸ் பெற வேண்டும்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்
'சும்மா, வெறுமனே கூட்டம் கூட்டினாலே, கொரோனா பரவி விடும் என்பர். அதிலும், புறக்கணிக்கிறோம், அ.தி.மு.க.,வை என தீர்மானம் நிறைவேற்றினால், சும்மா வேடிக்கை பார்க்குமா, அ.தி.மு.க., அரசு...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களில், ஏராளமான மக்கள் பங்கேற்கின்றனர். அவருக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது. புதிய எழுச்சி காணப்படுகிறது. தி.மு.க., கூட்டணி, 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ
'அவரைப் பற்றி நீங்கள் பேசிய பேச்சுகள், சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அதில், அப்படியே, 'உல்டா'வாக கூறியுள்ளீர்கள்...'என, கூறத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி.