சிக்மகளூர்: கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா, சிக்மகளூரு அருகே ரயில் பாதையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகராக மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த தர்மே கவுடா உள்ளார். கடந்த 15ம் தேதி மேலவையின் சிறப்பு கூட்டத்தில், பசுவதை தடுப்பு சட்டத்தை பா.ஜ., அரசு நிறைவேற்ற முயற்சி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர், தனது இருக்கையில் அமர மறுத்ததால், காங்கிரஸ் - பா.ஜ., இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, துணை சபாநாயகரான தர்மே கவுடா, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், தர்மே கவுடாவை சபாநாயகர் இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்வுகள் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில், தர்மே கவுடா, இன்று அதிகாலை 2 மணியளவில், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த போலீசார், அதற்கான கடிதம் அவரது உடல் அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மே கவுடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, சட்டமேலவை துணை சபாநாயகரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான தர்மேகவுடாவின் தற்கொலை அதிர்ச்சி அளக்கிறது. அவர் அமைதியானவர், நாகரீகமானவர். அவரது மறைவு மாநிலத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.
முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தர்மே கவுடாவின் அகால மரணம் துரதிர்ஷ்டவசமானது. அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு பலம் பெற வேண்டும் என ரெிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE