மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர் - கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி 0-1 என, பின்தங்கி உள்ளது. இரண்டாவது டெஸ்ட் ‛பாக்சிங் டே' போட்டியாக மெல்போர்னில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195, இந்தியா 326 ரன்கள் எடுத்தன. பின், 131 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. கிரீன் (17), கம்மின்ஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று 4ம்நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு கிரீன், கம்மின்ஸ் ஜோடி ஆறுதல் தந்தது. ஏழாவது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்த போது பும்ரா பந்தில் கம்மின்ஸ் (22) அவுட்டானார். முகமது சிராஜ் ‛வேகத்தில்' கேமரான் கிரீன் (45), நாதன் லியான் (3) வெளியேறினர். அஷ்வின் ‛சுழலில்' ஹேசல்வுட் (10) போல்டானார். இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு ‛ஆல்-அவுட்' ஆனது. ஸ்டார்க் (14) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் சிராஜ் 3, பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா 2, உமேஷ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்சில் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்தியா. மயங்க் அகர்வால் (5), புஜாரா (3) அணியை கைவிட்டனர். சுப்மன் கில் பவுண்டரி மழை பொழிய இந்திய அணி வெற்றி எளிதானது. 15.5 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 70 எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. சுப்மன் கில் (35), ரகானே (27) அவுட்டாகாமல் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE