புதுடில்லி:விவசாய சங்கங்களுடன், ஆறாம் கட்ட பேச்சு, நாளை நடக்கவுள்ள நிலையில், “புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்,” என, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. விவசாய சங்கங்களுடன் இதுவரை நடந்த ஐந்து கட்ட பேச்சும், தோல்வியில் முடிந்தன.ஆறாம் கட்ட பேச்சு, நாளை நடக்க உள்ளது. டில்லியில் உள்ள, 'விக்யான் பவன்' மையத்தில் நடக்கவுள்ள இந்த பேச்சில் பங்கேற்க, 40 விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதில், எம்.எஸ்.பி., எனப்படும், குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, விவசாயிகள் மத்தியில் தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது, மிகவும் வருத்தமாக உள்ளது.விவசாயிகளின் போராட்டத்திற்கு, விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் இதயங்களில் பொய்களால் கட்டமைக்கப்பட்ட சுவர், விரைவில் தகர்த்தெறியப்படும். உண்மை ஒருபோதும் மாறாது. அதை அனைவரும் உணரவேண்டிய நேரம் விரைவில் வரும்.இந்த புதிய சட்டங்களின் பலன்கள், விவசாயிகளிடம் சென்றடையத் துவங்கி உள்ளன. பல விவசாயிகள், இந்த சட்டங்கள் குறித்து நேர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.சில விவசாயிகளுக்கு மட்டுமே, இந்த சட்டங்களில் குழப்பம் நீடிக்கிறது.அவர்களுக்கும் தெளிவாக எடுத்துரைத்து புரியவைப்போம். அவர்களது கவலைகளை தீர்ப்போம்.இந்த புதிய வேளாண் சட்டங்கள், ஏழை, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பலனிக்கும் என முழுமையாக நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE