சென்னை: உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் கட்சி துவங்கவில்லை எனவும், அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ள நடிகர் ரஜினி, அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து:
பாலகிருஷ்ணன் மா., கம்யூ..
ஐதரபாத்தில் இருந்த போதும் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது பிரச்னை இல்லை. உடல் நலத்துடன் இருப்பது அவசியம் என தெரிவித்தோம். இப்போதும் உடல் நலன் முக்கியம். ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். கட்சி ஆரம்பிப்பது அவரின் தனிப்பட்ட விருப்பம். உடல்நிலை காரணமாக ஆரம்பிக்கவில்லை என்பதும் அவரின் விருப்பம். ஆரம்பித்தாலும் பிரச்னை இல்லை. ஆரம்பிக்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. ஆட்சி மாற்றம் என்பதை பார்த்து அவரது ரசிகர்கள் செயல்பட வேண்டும் என்பது வேண்டுகோள். அவரை கட்டாயப்படுத்தி களமிறக்கியவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம்.
அன்வர் ராஜா, அ.தி.மு.க.,
ரஜினி எடுத்த முடிவு அவரது உடல்நிலையை கருதி, டாக்டர்களின் அட்வைஸ் எடுத்து முடிவெடுத்துள்ளார். வரவேற்கத்தக்கது. எதற்காக கட்சி துவங்க வேண்டும் என நினைத்தாரோ அதற்காக ரசிர்களை வலியுறுத்துவார் என நினைக்கிறேன். இப்போது ஆட்சி மாற்றம் இல்லை என ஒப்பு கொண்டதால் தான் இந்த முடிவெடுத்துள்ளார். எங்களை ஆதரிக்கும்படி ரசிகர்களை வலியுறுத்துவார்.
ரஜினி சகோதரர் சத்தயநாராயணன்
அவர் உடல்நலன் நல்லா இருந்தா போதும். ரஜினி அரசியலில் சாதிக்க தேவையில்லை. ரஜினி நன்றாக இருந்திருந்தால் அரசியலுக்கு வந்திருப்பார்கட்சி துவங்கவில்லை என்ற ரஜினியின் முடிவு இப்போது தான் தெரியும்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ
இது அவரின் தனிப்பட்ட முடிவு. விருப்பம். இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. அவரின் முடிவை விமர்சிப்பது தவறு. தொடங்கவில்லை என சொல்லிவிட்டார். எந்த தாக்கமும் இருக்காது. அதிமுகவின் பலம், எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு உள்ள பலம் இப்போதும் உள்ளது. எம்ஜிஆரின் ஓட்டு அதிமுகவிற்கு தான் கிடைக்கும். எம்ஜிஆரை அதிமுக மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுவார்கள்

காங்கிரஸ் ஜோதிமணி
பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. கட்சி வரும் போது தாக்கம் இருந்தால்தான், வராவிட்டால் தாக்கம் இருக்கும். கள நிலவரம் பற்றி பாஜ, அதிமுக கூட்டணியை தோற்கடித்து, திமுக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர். உடல்நலன் கருதி முடிவெடுத்திருந்தால் அதனை மதிக்கிறோம். ரஜினி முடிவினால், அரசியல் களத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. பா.ஜ.,வுக்கு ஏமாற்றம் இருக்கலாம்.
ஆடிட்டர் குருமூர்த்தி
ரஜினி கட்சி துவங்கவில்லை என்றாலும், 1996 போன்று அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்
ரஜினி எடுத்த முடிவில் சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம். சென்னை சென்ற பிறகு ரஜினியை சந்தித்துவிட்டு, உங்களுக்கு செய்தி சொல்கிறேன். காமராஜருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் சினிமாக்காரர்கள். மக்கள் அளித்த வரவேற்பை பார்க்கும்போது தமிழகத்திற்கு மாற்றம் ஏற்பட்டு விட்டது என்பதை உணர்த்துகிறது.
அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும்.
சீமான்
ரஜினிகாந்த், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்.
பா.ஜ.,வின் நடிகை குஷ்பு
ரஜினி முடிவு, ஒவ்வொரு தமிழனின் மனதையும் நொறுக்கிவிட்டது. உங்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை விட வேறு எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்கிறேன். உங்களின் நண்பர், நலம் விரும்பி என்ற முறையில் உங்களின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நீங்கள் எனக்கு முக்கியமானவர். விலைமதிப்பற்றவர். கவனமுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள்.
பா.ஜ., பொறுப்பாளர், நடிகை கவுதமி
ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டது தமிழக மக்கள் மட்டுமல்லாது தேசத்திற்கே பேரதிர்ச்சியாக உள்ளது. அவர் நல்லபடியாக இருக்க நான் வேண்டிக்கொள்கிறேன்.
அர்ஜூன மூர்த்தி
மிகுந்த வருத்தமான சூழல் ரஜினியின் இதயத்தில் தற்போது இருப்பதை அறிகிறேன். ரஜினியின் முடிவுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE