சென்னை : உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் வருகை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதற்கு சமூகவலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்களும் எழுந்ததால் ரஜினி டிரெண்டிங் ஆனார்.
அரசியல் நிலைப்பாட்டில் பல சமயங்களில் தனது முடிவை மாற்றி வந்த நடிகர் ரஜினிகாந்த், அடுத்த மாதம் உறுதியாக கட்சி துவங்குவதாக அறிவித்து இருந்தார். அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்தார் ரஜினி. அங்கு சிலருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் அவருக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். தற்போதைய சூழலில் அதுவும் கொரோனா காலக்கட்டத்தில் அரசியலுக்கு தனது உடல் ஒத்துழைக்காது என்பதால் உடல்நிலையை காரணம் காட்டி தான் அரசியலில் இறங்க போவது இல்லை. ரசிகர்களும், மக்களும் என்னை மன்னித்து விடுங்கள் என இன்று(டிச.,28) ரஜினி அறிவித்துவிட்டார்.

ஓரிரு நாளில் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ரஜினியின் இப்படி ஒரு அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. குறிப்பாக அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனால் அரசியலில் பின்வாங்க ரஜினி சொன்ன விஷயம், மிகவும் வலுவான காரணம் என்பதால் அதை ரசிகர்கள் ஏற்க தொடங்கி உள்ளனர். ரஜினியின் அரசியல் இல்லை என்ற அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூகவலைதளமான டுவிட்டரில் தேசிய அளவில் ரஜினி டிரெண்ட் ஆனார்.
டுவிட்டரில் ரஜினியின் முடிவுக்கு ஆதரவும், விமர்சனமும் காணப்படுகிறது. ஆதரவு என்று பார்த்தால் பலரும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒருவர், ''நல்ல முடிவு, உடல்நிலையை பாருங்கள், அது தான் ரொம்ப முக்கியம். சீக்கிரம் குணமாகி வாங்க, மக்களை எப்போதும் போல படங்கள் மூலம் மகிழ்விங்க'' என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ''ரஜினி உண்மையாகவே அரசியலில் இறங்கி நல்லது செய்யலாம் என தனது முயற்சிகளை தொடர்ந்தார். ஆனால் கொரோனா அவை அனைத்தையும் பாழாக்கிவிட்டது. பரவாயில்லை. அவரது முடிவை ஏற்போம்'' என பதிவிட்டுள்ளார்.
''வருத்தமான விஷயம் தான், ஆனால் உங்களது உடல்நிலை தான் எங்களுக்கு முக்கியம், என்றும் உங்களுடன் இருப்போம் தலைவா'', ''நீங்கள் இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டதால் உங்கள் மீதான அன்பு குறைந்துவிடும் என எண்ண வேண்டாம். எப்போதும் எங்கள் தலைவர் தான் நீங்கள், உடலை பார்த்து கொள்ளுங்கள்'' என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

அதேசமயம் விமர்சனங்களும் எழுந்துள்ளன. ''ரஜினியின் இந்த முடிவு அதிமுக., திமுக.,வுக்கு சாதகமாக அமைந்துவிட்டது''. ''மகாத்மா காந்தி வயதான காலத்தில் தான் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார். ஆகவே உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி வரவில்லை என கூறுவது ஏற்புடையது அல்ல''. ''ரஜினி எனும் குதிரை கீழே விழலாம் ஆனா சட்டுனு எந்திரிக்கும், காத்திருக்கிறோம், மாற்றம் ஒன்றே மாறாதது''. ''மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என சொன்னது இது தானா....'', ''சிஸ்டம் சரியில்லைனு சொன்னது மத்தவங்களுக்கா, உங்களுக்கா...'', ''இத்தனை ஆண்டுகளாக தன்னை நம்பி இருந்த ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றிவிட்டார். அவர்கள் உங்களுக்காக செய்த அத்தனை பணிகளும், பணமும் வீணாக போனது''.
''தமிழ்நாட்டிற்கு நல்ல விஷயம் தான். 70 வயதாகிவிட்டது, இனி அவர் வந்து என்ன செய்ய போகிறார்'' என்பது மாதிரி பல விமர்சனங்களும் சமூகவலைதளத்தில் ரஜினி மீது வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக டுவிட்டரில், #ரஜினிகாந்த், #Rajinikanth, #Thalaiva, #Gooddecision போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE