கூட்டணிக்கு 'வேட்டு' வைக்காதீர்!
க.சோணையா, திருமங்கலம், மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக, பா.ஜ., தலைவர்கள், தடாலடியான பேச்சில் ஈடுபடுகின்றனர். இது, பா.ஜ.,வின் வளர்ச்சிக்கும், ஆரோக்கிய அரசியலுக்கும் உகந்ததல்ல.தமிழக, பா.ஜ., தலைவர்களாக இருந்த இல.கணேசன், தமிழிசை உள்ளிட்டோரின் பேச்சு மற்றும் செயல்பாடு, ஆரோக்கியமானதாக இருந்தன.ஆனால், இன்றையத் தலைவர்கள், 'எடுத்தேன்; கவிழ்த்தேன்' என்று பேச ஆரம்பித்து விட்டனர்.தமிழகத்தில், 'தாமரை' மலர வேண்டும் என்றால், அதற்கான ஆயத்தப் பணிகளை, மக்களிடம் முன்னெடுத்து செல்ல வேண்டும். அதை விடுத்து, திராவிடப் பேச்சாளர் போல, அநாகரிகமாக பேசக் கூடாது; இதை, மக்களும் ரசிக்க மாட்டார்கள்.மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின் தான், தமிழகம் எனும் குளத்தில், தாமரை இலை ஓரளவு தெரிய துவங்கி இருக்கறது. அது, இனிமேல் தான் மொட்டு விட்டு, மலர வேண்டும்.அதற்குள், தமிழகமே தாமரைக் காடாய் மாறிக் கிடப்பது போன்ற மமதையில், பா.ஜ.,வினர் ஆட்டம் போடக் கூடாது, இதை, பா.ஜ., மூத்தத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்.தமிழகத்தில், அ.தி.மு.க., உடன் நாகரிகமான கூட்டணி அமைத்து, கொடுக்கும் தொகுதியைப் பெற்று, சட்டசபைக்குள், பா.ஜ., நுழைய முயற்சிக்க வேண்டும்.அதை விடுத்து, 'முதல்வர் வேட்பாளரை, பா.ஜ., தலைமை தான் முடிவு செய்யும். கொள்ளையடித்த பணத்தை தான், கொடுக்கின்றனர்' எனக் கூறி, கூட்டணிக்கு, 'வேட்டு' வைக்கக் கூடாது.
'இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்டானாம்' என்ற சொலவடை போல, தமிழக பா.ஜ., தலைவர், எல்.முருகன் உள்ளிட்ட, அக்கட்சி நிர்வாகிகள் செயல்படக் கூடாது.படிப்படியாக ஏறித் தான், உச்சத்துக்கு போக முடியும். 'சொய்ய்ங்ங்'ன்னு உச்சில போய் உட்கார, அரசியல் ஒன்றும், 'ஜீபூம்பா' விளையாட்டு கிடையாது.தமிழகத்தைப் பொறுத்தவரையில்,
அ.தி.மு.க.,வை பகைத்துக் கொள்வது, பா.ஜ., வுக்கு நல்லதல்ல.
கொதிக்கிறது தானே அடங்கும்!
நவசக்தி சோமு, சென்னையிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர் ஜெ., காலமானதை அடுத்து, அ.தி.மு.க., தலைமையிலான தமிழக அரசைக் கவிழ்க்க, பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், தி.மு.க., தோல்வியைத் தான் தழுவியது.முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அரசு மீது குற்றச்சாட்டு, விமர்சனம், அநாகரிக பேச்சு என, தி.மு.க., எய்த அம்புகள் எல்லாம், முனை மழுங்கின.அதனால், வேளாண் சட்டத்திற்கு எதிராக, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லை.'புதிய வேளாண் சட்டம், திடீரென முளைத்து விட்டதல்ல. கால் நுாற்றாண்டுக்கும் மேலாக, காங்கிரஸ் - தி.மு.க., உட்பட எதிர்க்கட்சிகள் முன் வைத்த கோரிக்கைகளை உள்ளடக்கியதே' என, பிரதமர் மோடி தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.'வேளாண் சட்டத்தில் எந்தெந்த விதிகள், என்னென்ன பாதிப்பு என பட்டியலிடுங்கள்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.'வேளாண் சட்டத்தால் ஆபத்து' என பூச்சாண்டி காட்டுகின்றனரே தவிர, என்ன ஆபத்து என்பதை, எதிர்க்கட்சியினர் கூறவில்லை. சட்டியில் இருந்தால் தானே, அகப்பையில் வரும்.மத்திய அரசு, டில்லியில் போராட்டத்தில் ஈடுபடுவோரை வேதனைப்படுத்தாமல், எய்தோரையும், துாண்டி விட்டோரையும் கண்டறிந்து, அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.எரிகிறதைத் தடுத்தால், கொதிக்கிறது தானே அடங்கும்.
நோய்பரவும் வழியை அடைக்கணும்!
ஆர்.நடராஜன், ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர், கனரா வங்கி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மீண்டும், ஊரடங்கு கொடுமையை அனுபவிக்க முடியாது. எனவே, புதிய கொரோனா வைரஸ் பரவலை, தீவிரமாக தடுக்க வேண்டும். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகக் கூடாது.மீண்டும் உயிர் பெற்றுள்ள, அதிக வீரியமுடைய கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதில், அரசு பின்தங்கியது போல் உள்ளது.இந்த வைரஸ், முன்பை விட, மிக எளிதாக, வேகமாக எல்லோரையும் சென்றடையும்.அரை மணி நேரத்தில், கொரோனா பரிசோதனை நடத்தி, முடிவு அறிந்து கொள்ள முடிகிறது.எனவே, தமிழகத்தின் அனைத்து எல்லையிலும், மருத்துவ முகாம் அமைத்து, உள்ளே நுழையும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின், அவர்கள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.பிரிட்டன் தான், இந்நோயின் துவக்கமாக உள்ளது. எனவே, அங்கிருந்து வந்த அனைவரையும், அதே விமானத்தில் திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்.அவர்களை ஊருக்குள் அனுப்பிய பின், இப்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் புதிய கொரோனா தொற்று உடையோர் இருந்தால், அவரது குடும்பத்தினருக்கு இந்நேரம் பரவி இருக்கும்; அவர்கள் வழியாக, பிறருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கும்.இவ்விஷயத்தில், அரசு மிக அலட்சியமாக இருந்துள்ளது. உடனடியாக, அனைத்து விமான நிலையங்களையும் மூட வேண்டும்.பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை மட்டுமல்லாது, அனைத்து விமான சேவையும் ரத்து செய்ய வேண்டும்.ஏனெனில், பிரிட்டனில் இருந்து பிற நாடுகளுக்கு சென்றோர், அங்கிருந்து, நம் நாட்டிற்கு கொரோனா பரவ காரணமாக மாறியிருப்பர்.சென்ற முறை, விமானப் போக்குவரத்தை அனுமதித்ததால் தான், பயணியர் அனைவரும், காய்ச்சல் மாத்திரை உட்கொண்டு, அரசை ஏமாற்றி, நம் நாட்டிற்குள் நுழைந்தனர்.
அதனால், விமானப் போக்குவரத்தை தடை செய்வது தான், நல்ல தீர்வு.இல்லையெனில் மீண்டும் ஓர் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை வரும். மக்கள் வாழ்வாதரம் முற்றிலும் இழந்து, கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவர்.வெறுமனே கைகழுவி, முக கவசம் போட்டு, சமூக இடைவெளி கடைப்பிடிப்பதால் மட்டுமே, இந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது.நோய் பரவும் வழியை அடைப்பதே, மிகச் சிறந்த நடவடிக்கை.நம் நாட்டை பொறுத்தவரையில், விமான போக்குவரத்தை பயன்படுத்துவோர், 1 சதவீதம் கூட இல்லை; அவர்களுக்காக, 99 சதவீத மக்களை, 'பலிகடா'வாக மாற்றக் கூடாது.அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நோய் தொற்று எனும் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE