'திண்ணையை ஆக்கிரமிக்க ஒருத்தர் வர்றதைத் தடுக்க நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு... இதை யாரும் கெடுத்துடுவாங்களோ...' என்ற பயத்தில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி பேட்டி: கட்சி துவங்க மாட்டேன் என்று கூறி ஒதுங்கியவரை மருத்துவமனையில் சேரும் அளவிற்கு நெருக்கடி தருகின்றனர். ரஜினி பூரண நலம் பெற்று, சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும்.
'காவியும் ஒரு நிறம் தானே என நினைத்து, அமைதியாக இருந்து விடுங்கள். ஏனெனில், எல்லாம் காவிமயமாகி வருவதாக கூறுகிறீர்கள். எதற்கு வீண் வம்பு...' என, கிண்டலாக கூறத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: வள்ளுவருக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளதில், அ.தி.மு.க.,விலும் அரசுத் துறைகளிலும் சனாதனிகள் ஊடுருவியுள்ளனர் என்பதற்கு சான்று. ஏற்கனவே பாரதியின் முண்டாசில் காவி. இப்போது வள்ளுவரின் ஆடையில் காவி. பள்ளிப் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சு பாய்ச்சும் நயவஞ்சகம். சூதுமதி கேடர்களின் சூழ்ச்சியைக் கண்டிக்கிறோம்
'நீங்கள் சொல்வது போல நடக்கவில்லையே; மிரட்டலுக்கு அஞ்சும் கட்சியா, அ.தி.மு.க., ' என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் அறிக்கை: பலவீனமான தலைமையாலும், அமைச்சர்களின் ஊழல்களாலும், அ.தி.மு.க.,வை, பா.ஜ., மிரட்டி வருகிறது. தன்மானம் உள்ள எந்தத் தலைவரும், பா.ஜ.,வின் செயலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
.
'நீங்கள் சொல்ல வருவது, 'இத்தாலியைப் பூர்வீகமாக கொண்ட சோனியாவின் மகன் ராகுல், இத்தாலிக்கு எளிதாக சென்று வருகிறார்' என்பதைத் தானே... என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: யாரெல்லாம் இத்தாலிக்கு வர முடியும் என்ற பட்டியலை, இத்தாலிய அரசு வெளியிட்டுள்ளது. வேலை, உடல் நலம், அவசர காரியம், சொந்த நாட்டினர் ஆகிய நான்கு பிரிவினர், எப்போது வேண்டுமானாலும், இத்தாலிக்கு வர முடியும் என கூறியுள்ளது. காங்., முன்னாள் தலைவர் ராகுல், எதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து இத்தாலி சென்றுள்ளார் என்பதுதெரியவில்லை.
'தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் கட்சித் தலைவரின் சகோதரருக்கே இந்த நிலையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேச்சு: தமிழகத்தில் நடைபெறும் கமிஷன் ராஜ்ஜியம், தொழில்களைப் பாதிக்கிறது. தொழில்முனைவோர் பாதிக்கப்படுகின்றனர். கமிஷன் கொடுக்க விரும்பாததால், என் சகோதரர் சந்திரஹாசன் பல தொழில்களில் இருந்து விலகி விட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE