அமைச்சரின் ஜாதி பாசத்தால் கட்சியினர் கடுப்பு!
''புகாரையே வாங்காம, ரெண்டு மாசமா இழுத்தடிச்சுண்டு இருக்கார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.
''போலீஸ் தகவலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ஆமாம்... காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே, ஏகனாபுரம் கிராமத்துல, 'டாஸ்மாக்' கடை ஒண்ணு இருக்கு... இங்கே ஒரு சூப்பர்வைசர், இரண்டு சேல்ஸ்மேன்கள் இருக்கா ஓய்...
''ரெண்டு மாசத்துக்கு முன்ன, கடையில வசூலான, 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயோட மூணு பேரும் பைக்குல போறச்ச, ஆறு பேர் வழிமறிச்சு, அடிச்சு, உதைச்சு, பணத்தை பறிச்சுண்டு போயிட்டா... ஒரு சேல்ஸ்மேனுக்கு தலையில நாலு தையல் போடுற அளவுக்கு காயம் ஆயிடுத்து ஓய்...
''இது சம்பந்தமா, சுங்குவார்சத்திரம் போலீஸ்ல புகார் குடுத்தப்ப, அங்க இருந்த அதிகாரி, வாங்கவே மாட்டேனுட்டார்... பலமுறை அலைஞ்சும், சூப்பர்வைசரை மிரட்டி அனுப்பிட்டார் ஓய்...
''இதனால, ஊழியர்கள், தங்களது சொந்தப் பணத்தை போட்டு, கணக்கை நேர் பண்ணிண்டா... அந்தக் காசை எடுக்கணும்கறதுக்காக, மது பாட்டில்களுக்கு, 'எக்ஸ்ட்ரா சார்ஜ்' வச்சு வித்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மணிமாறன் வரார்... சுக்கு காபி போடுங்க...'' என்ற அன்வர்பாயே, ''வரும்போதே, வம்போட வர்றாரேன்னு புலம்புறாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்.
''யாரைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''கோவை முன்னாள் மேயர் ராஜ்குமார், சமீபத்துல, ஆளுங்கட்சியில இருந்து, தி.மு.க.,வுக்கு தாவுனாரு பா... இவரது பகுதியில, மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரா இருக்கிற பையா கவுண்டர், ராஜ்குமாருக்கு சொந்தக்காரர் கூட...
''ஆனாலும், அவரை மதிக்காம, கோவை மாநகர் கிழக்கு மாவட்டச் செயலர் கார்த்திக்கோட சென்னைக்கு போய், ஸ்டாலின் முன்னிலையில, கட்சியில சேர்ந்துட்டாரு பா... கவுண்டம்பாளையம் அல்லது கோவை வடக்கு தொகுதியை, ராஜ்குமார் குறி வச்சிருக்கார்னு சொல்றாங்க...
''இந்தத் தொகுதிகள்ல, தனக்கு எதிர் கோஷ்டி, 'சீட்' வாங்கிடக் கூடாதுன்னு, ராஜ்குமாரை கார்த்திக் இழுத்து போட்டாராம் பா... இன்னொரு தரப்போ, 'எம்.எல்.ஏ., சீட் கிடையாதுங்கிற உத்தரவாதத்துல தான், அவரை சேர்த்திருக்கிறதாவும் சொல்றாங்க...
''எல்லாத்துக்கும் மேலா, முதல்ல பா.ஜ.,வுக்கு தான் ராஜ்குமார் துண்டு போட்டாராம்... அங்க, 'கிரீன் சிக்னல்' கிடைக்காம தான், தி.மு.க., பக்கம் ஒதுங்குனார்னும் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஜாதி பார்த்து பதவி தர்றாருன்னு வருத்தப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன், திருச்சி மாநகர மாவட்ட, அ.தி.மு.க., செயலராகவும் இருக்காருல்லா... இவர், கட்சி பொறுப்புகள்ல, முஸ்லிம்கள், தலித் சமுதாயத்தினருக்கு வாய்ப்பு தர மாட்டேங்காரு வே...
''தன் சமுதாயத்துக்கும், இன்னொரு சமுதாயத்துக்கும் தான் முக்கியத்துவம் தர்றாருன்னு சொல்லுதாவ... 'முஸ்லிம்கள், தலித் ஓட்டுகள், கட்சி மாறி விழுந்தா, அதுக்கு அமைச்சர் தான் காரணம்'னு, ஆளுங்கட்சியினரே புலம்புதாவ வே...'' என, முடித்து அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE