வதோதரா:'படிப்பில் கவனம் செலுத்தவில்லை' என, பெற்றோர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த, 14 வயது சிறுவன், வீட்டில் இருந்து, 1.5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று, கோவாவில் உல்லாசமாக செலவிட்ட சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த, 14 வயது சிறுவன், படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என, பெற்றோர் கடுமையாக திட்டினர். ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்தான். வீட்டில் இருந்து, 1.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடி, கோவா செல்ல திட்டமிட்டான். சிறுவனிடம் ஆதார் அட்டை இல்லாததால், ரயில் டிக்கெட் வாங்க முடியவில்லை.
எனவே, வதோதராவில் இருந்து பஸ் பிடித்து, மஹாராஷ்டிராவின் புனே சென்று, அங்கிருந்து மற்றொரு பஸ்சில், கோவா சென்றான்.அங்கு, கடற்கரை விடுதிகளில் தங்கி, இரவு விடுதிகளுக்குச் சென்று, இஷ்டம் போல செலவு செய்து உல்லாசமாக இருந்தான். பணம் தீர்ந்து போகும் நிலை வந்ததும், மீண்டும் பஸ் பிடித்து புனே வந்தான். அங்கு, புதிய 'சிம் கார்டு' வாங்கி, தன், 'மொபைல் போனை' முதல்முறையாக, 'ஆன்' செய்தான். பெற்றோர் அளித்த புகாரின்படி, போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில், மொபைல் போன் சிக்னலை வைத்து, உடனடியாக அவனது இருப்பிடத்தை அறிந்த போலீசார், புனே வந்து, சமீபத்தில், சிறுவனை மீட்டு சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE