மாதவரம் : ஊரடங்கின் போது, இருசக்கர வாகனங்களை திருடி, குறைந்த விலைக்கு விற்று, ஜாலியாக இருந்தவர் கைதானார்.
சென்னை, மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில், ஏப்ரலில் கொரோனா ஊரடங்கின் போது, பூ மற்றும் பழம் விற்பனை கடைகள் மூலம், தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டது.அப்போது, அந்த கடைகளுக்கு வந்து செல்வோரின் இரு சக்கர வாகனங்கள், அவ்வப்போது திருடு போயின. இது தவிர, செங்குன்றம், புழல் சுற்றுவட்டாரங்களில் உள்ள வணிக வளாகங்கள் அருகே நிறுத்தப்பட்ட வாகனங்களும் திருடு போயின.இது குறித்து, வாகன உரிமையாளர்கள் புகார் செய்தனர். இதையடுத்து, மாதவரம் தனிப்படை போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் மூலம், இரு சக்கர வாகன திருடன் குறித்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், செங்குன்றம் அடுத்த பொத்துார், லட்சுமிபுரம் கிராமத்தில், சில மாதத்திற்கு முன், குறைந்த விலையில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்த தகவல் கிடைத்தது.அதனால், தனிப்படை போலீசாரும், குறைந்த விலையில், வாகனம் வாங்கும் நபர்கள் போல், இரு சக்கர வாகன திருடனை தேடி வந்தனர்.நேற்று முன்தினம், லட்சுமிபுரம், பெரியார் நகர், தமிழ் பிரியன் தெருவைச் சேர்ந்த பாலகுருவின் மகன் நவநீதகிருஷ்ணன் தான், 42, அந்த திருடன் என்பது, போலீசாருக்கு தெரிந்தது.அவர், தன் தோழியின் வீட்டில் தங்கியிருந்த போது, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை சுற்று வட்டாரங்களில் திருடும் வாகனங்களை, கிராமத்தை சேர்ந்தவர்களிடம், குறைந்த விலைக்கு விற்று, அதில் கிடைத்த பணத்தில், மது, மாது என, உல்லாசமாக வாழ்ந்தது தெரிய வந்தது.இதையடுத்து, அவரால் விற்கப்பட்ட, 26 இரு சக்கர வாகனங்களை, போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், திறமையாக செயல்பட்டு, வாகனங்களை மீட்ட, மாதவரம்தனிப்படை போலீசாரை, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE