சென்னை : உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பை தொடர்ந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை புனரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, மதுரவாயல் - ஸ்ரீபெரும் புதுார் இடையிலான, 23 கி.மீ., சாலை உள்ளது. இந்த சாலையை, ஆறுவழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டிருந்தது. பல ஆண்டுகளாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதை காரணம் காட்டி, இச்சாலையில் காலமுறை புதுப்பிப்பு பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளவில்லை. இதனால், மதுரவாயல் முதல் வாலாஜா வரை, இச்சாலையில் பல இடங்களில், குண்டும், குழியும் உருவாகியுள்ளது. அணுகு சாலைகள், வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது.
இதை கண்டுக்கொள்ளாமல், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் வாலாஜா ஆகிய இரண்டு இடங்களில், சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வந்தது. இது தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. சாலையை புனரமைக்காததால், இரண்டு சுங்கச்சாவடிகளிலும், 50 சதவீத கட்டணம் மட்டுமே வாகனங்களிடம் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், கட்டண வசூல் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது.
உயர்நீதிமன்றம் கண்டிப்பை தொடர்ந்து, முதற்கட்டமாக, மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் வரை சாலையை புனரமைக்க, 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நசரத்பேட்டை - திருமழிசை இடையே, சாலை புனரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. இப்பணிகளை, மார்ச், 31ம் தேதிக்குள் முடிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE