பொது செய்தி

தமிழ்நாடு

ஆருத்ரா தரிசனம் காண்போம்; ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!

Added : டிச 29, 2020
Share
Advertisement
தமிழ் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது மார்கழி. மாதங்களில் நான் மார்கழி, நாட்களில் நான் திருவாதிரையாக விளங்குகிறேன் என,பகவான் கண்ணன், பகவத் கீதையில் சொல்லுவார்.இந்த மாதத்தில், காலைப் பனிக் குளிர் உண்டு. என்றாலும், பக்தியால் அதை விரட்டி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி பரவசப்படும் பக்தர்களும் கோவில்களில் உண்டு. இந்த மாதத்தில், வைணவக் கோவில்களில், ஏகாதசி
 ஆருத்ரா தரிசனம் காண்போம்; ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!

தமிழ் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது மார்கழி. மாதங்களில் நான் மார்கழி, நாட்களில் நான் திருவாதிரையாக விளங்குகிறேன் என,பகவான் கண்ணன், பகவத் கீதையில் சொல்லுவார்.இந்த மாதத்தில், காலைப் பனிக் குளிர் உண்டு. என்றாலும், பக்தியால் அதை விரட்டி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி பரவசப்படும் பக்தர்களும் கோவில்களில் உண்டு.

இந்த மாதத்தில், வைணவக் கோவில்களில், ஏகாதசி சிறப்பென்றால், சிவாலயங்களில் திருவாதிரை திருவிழா சிறப்பு. இன்று, திருவாதிரை.ஆடல்வல்லானாகிய நடராஜருக்கு உரிய நட்சத்திரம் தான் திருவாதிரை. ஆகவே தான் அவனை, 'ஆதிரை நாள் உகந்தான், ஆதிரை நன்னாளான்' என்று, திருமுறைகள் போற்றும். நடராஜர், தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்கி ஆடியது, ஆனந்த நடனம். அதே நடனத்தை, பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின்படி திருவாதிரையில், தில்லையில், மீண்டும் ஆடினாராம் சிவன்.அந்த தரிசனம் தான், இந்நாளின் ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா தரிசனம் கண்ணுக்கும், மனதுக்கும் இனிமை என்றால், இறைவனுக்குப் படைக்கப்படும் 'திருவாதிரைக் களி' நாவுக்கும் வயிற்றுக்கும் இனிமை.

தமிழகத்தில், திருவாதிரை விழா சிறப்பாக நடைபெற பலர் தானம் அளித்த செய்திகளை கல்வெட்டுகள் சொல்கின்றன. பல கோவில்களில், நடராஜர் இன்று, வீதி உலா வருவார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகரம் கோவிலில், திருவாதிரை நாளில் எழுந்தருள, 'அதிரை விடங்கர்' என்ற திருமேனி செய்தளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் உள்ள திருவாய்மூர் கோவிலில், 'வட்டனை ஆடல் உடையார்' என்ற ஆடல்வல்லான் திருமேனி திருவீதி உலா வந்ததைக் கல்வெட்டுகள் சான்று சொல்கின்றன.நடராஜர், திருவாதிரை நாளில், ஐந்து சபைகளில் சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.


அதாவது, கனக சபையான சிதம்பரம், வெள்ளி சபையான மதுரை, தாமிர சபையான நெல்லை, சித்திர சபையான குற்றாலம், ரத்தின சபையான திருவாலங்காடு ஆகிய இடங்கள் தான் அவை.சென்னை - திருத்தணி செல்லும் பாதைக்கு அருகேயுள்ள திருவாலங்காட்டுக்கு, வடாரண்யம் என்ற பெயரும் உண்டு. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும், போற்றப்பட்ட தலம் இது. சிவபெருமான் உவந்து ஆடிய அம்பலம் இது. உலகம் சிறப்புற்றிருக்க, இங்கு, இறைவன் ஆடிய, 'ஊர்த்துவ தாண்டவம்' தான், முதன்மையான தாண்டவம். இதற்கு, 'பெருங்கூத்து, செய்கரிய நடனம்' என்ற பெயர்களும் உண்டு.இறைவனின் ஐந்து செயல்களில், 'அருளல்' என்பதைக் குறிக்கும் தாண்டவம் இது.

காளியின் செருக்கைப் போக்குவதற்காக ஆடிய திருநடனம் இது. மிக வேகமாக சுழன்று ஆடியதால், 'சண்ட தாண்டவம்' என்றும், 'அனுக்கிரக தாண்டவம்' என்றும் அழைக்கப்படுவதுண்டு. காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு ஆடல்வல்லான் பெருமானிடத்தில், மிகவும் ஈடுபாடு கொண்டவர். இறைவனின் கூத்தைக் காண, தலையால் நடந்து வந்து, இறைவனின் திருவடியில் அமர்ந்து கண்டார். இந்தக் கூத்தை, அவரின், மூத்த திருப்பதிகங்கள் விரிவாகச் சொல்கின்றன. 'மண்டல நின்றங் குளாளமிட்டு, அணங்காடு காட்டில் கழலொலி' எனத் தொடங்கும் பாடல்களில், சிவனை பலவாறாகப் போற்றுவார்.


இதையே, 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்' எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஊர்த்துவத் தாண்டவத்தின் சிறப்புகளை, திருவாலங்காட்டு புராணமும், நக்கீரதேவ நாயனார், திருமூலரின் வரிகளும் போற்றிப் புகழ்கின்றன.இந்த ஊர்த்துவத் தாண்டவ சிற்பங்கள், பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையுள்ள சிற்பங்களில் அதிகம் உள்ளன.திருவாலங்காடு திருக்கோவிலில் வழிபடப்பெறும் ஊர்த்துவத்தாண்டவ மூர்த்திக்கு, மார்கழி திருவாதிரை நாளில், சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள், கோபுர தரிசனமும் நடைபெறுகின்றன

.மார்கழி மாதத்தில், திருவாதிரையில் தாண்டவமூர்த்தியான நடராஜரை வழிபட்டால், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் கிடைக்கும் என, காரண ஆகமம் கூறுகிறது.ஆனந்தம் ஆடாங்கு, ஆனந்தம் அகில சராசரம், ஆனந்தம், ஆனந்தக் கூத்து என, திருமூலர் ஆனந்த தாண்டவத்தைப் போற்றுகிறார்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில், ஆடல்வல்லானை வழிபட்டு, வாழ்வில் ஆனந்தம் அடைவோம்.
நடராஜர், திருவாதிரை நாளில், ஐந்து சபைகளில் சிறப்பு நடனம் ஆடியுள்ளார். அவை:1. கனக சபையான சிதம்பரம்

2. வெள்ளி சபையான மதுரை

3. தாமிர சபையான நெல்லை

4..சித்திர சபையான குற்றாலம்

5. ரத்தின சபையான திருவாலங்காடு.

-- கி.ஸ்ரீதரன்,தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை கண்காணிப்பாளர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X