புதுடில்லி:விவசாய சங்க பிரதிநிகளுடன், மத்திய அரசு, இன்று ஆறாம் கட்டமாக பேச்சு நடத்தவுள்ளது. இதையடுத்து, இன்று நடக்கவிருந்த டிராக்டர் பேரணியை, விவசாய சங்கத்தினர் நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 'இந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்தும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதத்தை தருவது குறித்தும் தான் பேச்சு நடத்த வேண்டும்' என, மத்திய அரசுக்கு, விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒத்திவைப்பு
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எனினும், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட ஐந்து கட்ட பேச்சும், தோல்வியில் முடிந்தன. ஆறாம் கட்ட பேச்சு, இன்று நடக்கிறது. இதன் காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை, விவசாய சங்கத்தினர் ஒத்திவைத்துள்ளனர். விவசாய சங்கங்களை ஒருங்கிணைக்கும், 'சம்யுக்த் கிசான் மோர்ச்சா' என்ற அமைப்பு, டில்லி - ஹரியானா இடையில் உள்ள சிங்கு மற்றும் டிக்ரி எல்லைப் பகுதிகளில் இருந்து, குண்டலி - மனேசர் - பால்வல் நெடுஞ்சாலை வரை, இன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசுடன் இன்று ஆறாம் கட்ட பேச்சு நடக்க உள்ளதால், அதை கருத்தில் வைத்து, டிராக்டர் பேரணி, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சந்தித்து பேசினார்.
தகவல்
இந்த சந்திப்பின்போது, விவசாயிகளுடன் பேச்சு நடத்தும் அமைச்சர்கள் குழுவில் அங்கம் வகிக்கும், ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷும் உடனிருந்தனர். இன்று நடக்கவுள்ள பேச்சில், மத்திய அரசின் நிலை என்ன என்பது குறித்து, இந்த சந்திப்பில் இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE