விழுப்புரம் : தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 85 ஆயிரத்து 534 அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் 417 முகாம்களில் வாழும் குடும்ப அட்டைகள் என மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 951 குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர் களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கும் பணி வரும் ஜன., 4-ம் தேதி துவங்கி 12ம் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு 13ம் தேதியும் வழங்கப் படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மதியம் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 534 அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் 417 முகாம்களில் வாழும் குடும்ப அட்டைகள் என மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 951 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது.
இதற்காக, மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தலா 5 லட்சத்து 85 ஆயிரத்து 951 கிலோ ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.2,500 வழங்க 146 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்கள் எந்த நாட்களில் எந்த நேரத்தில் கடைகளுக்கு சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து இன்று வரை டோக்கன் வழங்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் தெரு, பகுதி வாரியாக பரிசு தொகுப்பு வழங்கப்படும் விவரங்கள் அந்தந்த கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும்.அதன் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். இவற்றை மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பின்பு தான் வழங்கப்படும். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால், பறக்கும் படை தனி தாசில்தார் (-9445045608) மற்றும் சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார்தெரிவிக்கலாம்.
மேலும், இதுகுறித்து புகார் தெரிவிக்க தனியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04146- 223265, 229884 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். பரிசுத்தொகுப்பு பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE