கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரில் மிகவும் குறுகிக்கிடக்கும் தியாகதுருகம், சேலம் சாலைகளை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி-தியாகதுருகம்-சேலம் சாலைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. சென்னை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, சேலம், கோயம்புத்துார், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கள்ளக்குறிச்சி நகருக்கு இவ்விரு சாலைகள் வழியாகத்தான் சென்று வரவேண்டியுள்ளது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து உளுந்துார்பேட்டை-சேலம் நீலமங்கலம் பைப்பாஸ் சாலை இணைப்பு பகுதிவரை செல்லும் தியாகதுருகம் சாலை, ஏமப்பேர் பைபாஸ் சந்திப்பு வரையிலான சேலம் சாலை தலா 3 கி.மீ., தொலைவு உள்ளது.
இவ்விரு சாலைகளின், பெரும்பகுதி ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி குறுகிக்காணப் படுவதுடன், பல்வேறு இடங்கள் பள்ளம், படுகுழியுமாக பழுதடைந்தும் காணப்படுகிறது.இந்த சாலைகள் இரண்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு சாலைகளில் ஏராளமான பெட்ரோல் பங்க், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், போலீஸ் நிலையம் மற்றும் தொழில் மையங்கள் அமைந்துள்ளன. இதனால் பெரும்பான்மையான வெளியூர் செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் வாகனங்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்விறு சாலைகளும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பு பகுதியில்தான் பஸ் நிலையமும் அமைந்துள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருகின்றன. சாலைகள் குறுகியதாக உள்ளதால், இருபுறமும் வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.கடந்தாண்டு இந்த சாலைகளை அகலப்படுத்து வதற்கான அளவீட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்துடன் நின்றுபோன விரிவாக்க பணிகள் எந்தவித முன்னேற்றமும் இன்றி கைவிடப்பட்டது.
நகரின் முக்கிய 4 சாலைகளில் கச்சிராயபாளையம், சங்கராபுரம் ஆகிய இரண்டு சாலைகள் மட்டும் அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது.ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சேலம், தியாகதுருகம் சாலைகள் மட்டும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு உள்ளன. குறுகலான சாலைகளில் எங்காவது விபத்து ஏற்பட்டால், பல கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
மாவட்ட தலைநகராக உருவெடுத்துள்ள கள்ளக்குறிச்சியில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் விழிபிதுங்கும் நிலையில் இருக்கும் இந்த சாலையில், மேலும் பிரசார வாகனங்களின் அணிவகுப்பும் கூட உள்ளதால், கள்ளக்குறிச்சி நகரம், போக்குவரத்து நெரிசலில் சிக்குவது உறுதி.எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, இந்த இரு சாலைகளையும் உடனடியாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE