சென்னை:ஊரடங்கு மற்றும் சிமென்ட், மணல், கம்பி விலை உயர்வால், வீடு கட்டுவதற்கான செலவு, சதுர அடிக்கு, 200 ரூபாய் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
நாடு முழுதும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், சொந்த ஊர்களுக்கு சென்ற கட்டுமான பணியாளர்கள், பணிக்கு திரும்ப தயக்கம் காட்டுகின்றனர்.இந்நிலையில், சிமென்ட், மணல், டி.எம்.டி., கம்பி ஆகியவற்றின் விலை, முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், வீடு கட்டும் திட்டங்கள் பாதியில்முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, பெரிய நிறுவனங்களின் திட்டங்களில் மட்டும் பணிகள் துவங்கியுள்ளன. இதன் எதிரொலியாக, கட்டுமான செலவு திடீரென உயர்ந்துள்ளது. இது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, இந்திய கட்டுனர், வல்லுனர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறியதாவது:ஊரடங்குக்கு பிந்தைய சூழலில், கட்டுமான துறை வரலாறு காணாத பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பணியாளர் தட்டுப்பாடு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அடுத்தடுத்து புதிய பிரச்னைகள் வருகின்றன.இவ்வகையில், சிமென்ட், டி.எம்.டி., கம்பி விலை உயர்வு, இத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதே போல, பதிகற்கள், மின்சார இணைப்புக்கான சுவிட்ச், கேபிள் போன்ற பொருட்களின் விலையும், 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இதன் காரணமாக, கட்டுமான செலவு, சதுர அடிக்கு, 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது, வீடு வாங்கும் மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.புதிய வீடுகள் விற்பனையை இது பாதிக்கும். அரசு தலையிட்டு, கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தினால் தான் தீர்வு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE