சென்னை:சென்னையில், சுரானா என்ற தனியார் நிறுவன லாக்கர்களில், சி.பி.ஐ., வசம் இருந்த, 103 கிலோ தங்க கட்டிகள், கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடப்பட்டது, சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., விஜயகுமார் நடத்திய நேரடி ஆய்வில் அம்பலமானது.
சென்னை, சவுகார்பேட்டை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் செயல்படும், சுரானா என்ற தனியார் நிறுவனம், வெளிநாடுகளில் தங்க கட்டிகள் கடத்தலில், ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிறுவனத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள், 2012ல் திடீர் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இவற்றை, அந்நிறுவனத்தின் லாக்கர்களில், சி.பி.ஐ., முத்திரையுடன், 'சீல்' வைத்து பாதுகாத்தனர். இதில், 103 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகள் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்குமாறு, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை அதிகாரியாக, எஸ்.பி., விஜயகுமார் நியமிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம், தங்கம் மாயமானது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த, சமரச அதிகாரி ராமசுப்பிரமணியத்திடம் விசாரணை நடந்தது. அப்போது, அவர் சில வீடியோ ஆதாரங்களை வழங்கினார்.நேற்று காலை, சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், எஸ்.பி., விஜயகுமார் முன், சுரானா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் விஜயராஜ் சுரானா ஆஜரானார்.
அவர், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:நான் சுரானா நிறுவன இயக்குனர் பொறுப்பில் இருந்து, 2015 டிச., 4ல் ராஜினாமா செய்துவிட்டேன். பிரச்னைக்குரிய, 400.47 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, சம்பவ இடத்தில் நான் இல்லை.ஆனால், சி.பி.ஐ., அதிகாரிகள் என் முன்னிலையில், தங்க கட்டிகள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து உள்ளதாக ஆவணப்படுத்தி உள்ளனர். இது பொய்யான தகவல்.
தங்க கட்டிகள் மயமானது தொடர்பாக, தகவல் அறியும் சட்டம் வாயிலாக விபரங்கள் பெற்று, தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் முறையிட்டேன்.ஆனால், தங்க கட்டிகள் மாயமானது தெரிந்தும், சி.பி.ஐ., அதிகாரிகள் மற்றும் சுரானா நிறுவனம் பெற்ற கடனுக்காக நகைகளை கேட்ட வங்கி அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனக்கு பின், சுரானா நிறுவன இயக்குனராக தினேஷ் சந்த் சுரானா பொறுப்பேற்றார். அதன்பின், 2016 - 2017ல், 1,158 கிலோ தங்க நகைகள் விற்கப்பட்டுள்ளன. இது, எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேரடி ஆய்வு
இதையடுத்து, சென்னை, சவுகார்பேட்டை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள, சுரானா நிறுவனத்தில், நேற்று மாலை, 3:30 மணியில் இருந்து, 5:30 மணி வரை, எஸ்.பி., விஜயகுமார் தலைமையிலான போலீசார், லாக்கர்களை ஆய்வு செய்தனர். அப்போது, முதல் தளத்தில் உள்ள லாக்கரில், 3 கிலோவும், இரண்டாவது தளத்தில் உள்ள லாக்கரில், 100 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளும், கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடப்பட்டது உறுதியானது.
அந்த இடங்கள் மின்வசதி இல்லாமல், இருட்டு மண்டபம் போல காட்சி அளிப்பதால், மொபைல் போன் விளக்கு வசதியுடன் ஆய்வு மேற்கொண்ட போலீசார், சாட்சிகளான பத்திரப்பதிவு அதிகாரிகள் முன்னிலையில், 'வீடியோ' பதிவு செய்தனர். திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE