இது ஒன்றும் புதிதில்லை. ஒரே ஒரு மணி நேரத்திற்குள், உன்னிடம் உள்ள ஆற்றல் முழுதையும் வெளிப்படுத்தியாக வேண்டும். இந்நிலையில் தான், நம் புல்லாங்குழல் வித்வான் ஸ்ருதி சாகர் நின்றார். வித்வான் என்றால், ஏதோ வயதானவர் என்று கொள்ள வேண்டாம். நிச்சயமாக, 30 வயதைத் தாண்டியிராது. எடுத்ததே, 'தோடி' ராகத்தில், அதுவும் பிரமாண்டம் எனக்கூறவல்ல, 'ஸ்ரீ கிருஷ்ணம் பஜமானஸ...' எனும், இரண்டு களை தீக் ஷிதர் கிருதி. கற்பனை ஸ்வரங்களுக்கும் சேர்த்து, இவர் எடுத்துக் கொண்ட நேரம், 16.30 நிமிடம். அது தான், நேரத்தை சுலபமாக நம்மால் திரையிலேயே பார்க்க முடிகிறதே!
கேட்பதற்கு வாய்ப்பாட்டுக்காரர் அனுபவித்துப் பாடுவதைப் போலிருந்தது!அடுத்து ஹம்ஸ நாதம். கிறங்க வைக்கும் ஒரு ஸ்கேல் இது. திரையுலக இசையமைப்பாளர் இளையராஜா, நிறைய பாடல்களை இதில் அமைத்திருப்பதாக சொல்வர்.அது ஒருபுறம் இருக்க, இவர் அளித்த பாடல், 'பண்டுரீதி கொலுவுமில்லை' 'கல்யாணராமாவும்' இல்லை; தஞ்சாவூர் சங்கர அய்யரின், 'எழிலுடை...' எனும் பாடல். ஸ்ருதி சாகர் மெயினாக எடுத்தாண்டது சஹானா. தேர்ந்தெடுத்த பாடல், தியாகராஜரின், 'ரகுபதே ராம ராக் ஷஸ பீமா...' மூழ்கி முத்தெடுத்தல் என்பதைப் போல, ஒரு ராக சொற்றொடருக்கும், மற்றொன்றிற்குமான அந்தச் சிறிய இடைவெளி, ஒரு சுய சிந்திப்பிற்கான அவகாசம், வாத்தியம் தானே என்று அடித்து விடாமல், ஆலாபனையை மொத்தமாக ஆக்கம் நிறைந்ததாகவும், ஒரு தனிப்பாங்குடனும் இருக்கச் செய்தது.
பான்சுரி எனும் நீளவகை புல்லாங்குழல் ஒன்றும் உபயோகிக்கவில்லை. மந்தரஸ்தாயி சஞ்சாரங்களும், அதே குழலில் தான். கற்பனை ஸ்வரங்களின் போது, கார்வைகளை அவற்றின் மாத்திரை கணக்குபடி வாசித்தளித்த கோர்வைகளினால், ஒரு புதிய ஸ்வாரசியம் உண்டானது.கடைசியாக வந்தது,'டுமக சலத...' என்ற துளசிதாஸ் பஜன். அந்த மெட்டுடன் ஐக்கியப்பட்டு, ஸ்ருதி சாகர் வழங்கிய விதம், உடனே என்.ராஜம் என்ற வயலின் வித்வாம்சினியை நினைவூட்டியது. ராஜம், சமீபத்தில் காலமான வயலின் மாமேதை என்று அனைவராலும் கருதப்படும், டி.என்.கிருஷ்ணனின் தமக்கை.இந்தப் பாடல், இளம் பாலகனான ராமன் எனும் குழந்தை, முதலடியைத் தட்டுத் தடுமாறி எடுத்து வைக்க, காலின் சதங்கைகள் அவற்றுடன் இணைந்து, இசையெழுப்பிய காட்சியை அனுபவிக்கும் ஒன்று. இதைக் குழலில் கேட்பதில் இன்பம் இரட்டிப்பாக்கியது!கே.பி.நந்தினி வாய்ப்பாட்டிலும், சிறந்து விளங்கும் வயலின் கலைஞர். இதுபோன்ற இருவல்லமைக்காரர்கள், ஒரு சுயஎதிர்பார்ப்புடனே தான் மேடையேறுவர். பாடுதல் போல, நம் வாசிப்பு அமைய வேண்டுமென்பதே. இதை கொண்டு வரும் முயற்சியில், இவரது ஆலாபனையும், கீர்த்தனை வாசிப்பும் அமைந்திருந்தது.அக் ஷய் ராம் மிருதங்கத்தில் சொகுசாக பாடல்களுடன் இருந்து, அவற்றின் போக்கு மற்றும் காலப்பிரமாணத்தின் படி வாசித்து, தனியின் போது கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக நிர்வகித்து வாசித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடு: மியூசிக் அகாடமியின் நேரலை ஒளிபரப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE