கோவை:தேசிய 'இன்ஸ்பயர்' விருதுக்கு தேர்வானோர் பெயர், பள்ளி பெயருடன், சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து, கடந்த 2008 முதல், பள்ளி மாணவர்களுக்கு இன்ஸ்பயர் விருது வழங்கி வருகிறது.இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இவ்விருது, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமூகத்திற்கு பயன்படும் செயல்திட்டங்கள் சமர்ப்பித்தால், சிறந்த படைப்புக்கு, 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகையை கொண்டு மாணவர்கள், செயல்திட்டங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டும்.கொரோனா தொற்று காரணமாக, நடப்பாண்டில் ஆன்லைன் மூலம் செயல்திட்டங்கள் பெறப்பட்டன. மாநில அளவிலான இவ்விருதுக்கு, தகுதியானோர் பட்டியல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.இந்நிலையில், தமிழகம் முழுக்க, ஆயிரத்து 371 பேர் தேர்வாகியிருப்பதாகவும், கோவையில் 48 பேர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகவும், சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது. மாணவர்களின் பெயர், பள்ளி பெயருடன் வெளியாகியுள்ள இப்பட்டியலால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட கல்வித்துறைக்கு அதிகாரப்பூர்வ பட்டியல் அளிக்கப்படவில்லை. இப்பட்டியல் வந்ததும், அந்தந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE