கற்பித்தல் தொடர்பான எந்த பிரச்னை என்றாலும், அப்படி, இப்படி என்று எவரும் எந்த காரணத்தையும் இவரிடம் சொல்லித்தப்ப முடியாது. காரணம், இவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்து, பட்டதாரி ஆசிரியராக உயர்ந்தவர். பின் குரூப் ஒன் தேர்வெழுதி டி.இ.ஓ.,; பதவி உயர்வு பெற்று, சி.இ.ஓ., ஆனவர். காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரிந்தவர். நமது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாவுடன் ஒரு கலந்துரையாடல்!தமிழகம் முழுக்க, அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது. கோவையின் நிலை என்ன?கோவை மாவட்டத்தில், 2 ஆயிரத்து 45 பள்ளிகள் உள்ளன. இதில், அரசுப்பள்ளிகளில் மட்டும் தற்போது வரை, ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 857 மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பாண்டில் மட்டும், பிற வகை பள்ளிகளில் இருந்து, அரசுப்பள்ளிகளை தேடிவந்து, 4 ஆயிரத்து 480 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.இவர்களைதக்க வைத்து கொள்ள, நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் என்ன?பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு, அரசு பெருமளவில் நிதி ஒதுக்குகிறது. தொடக்கப்பள்ளிகளில் கூடஸ்மார்ட் கிளாஸ் ரூம் உள்ளது. மாற்றுத்திறன் குழந்தைகளும், முறைசார் பள்ளிகளில் படிக்க, போதுமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதோடு, மேல்நிலைப்பள்ளிகளில் ஹைடெக் லேப், அடல் திங்கரிங் லேப் அமைக்கப்பட்டுள்ளன.அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதும், உரிய நேரத்தில் மாணவர்களுக்கு திட்டங்களை கொண்டு சேர்ப்பதும் தான், என்னுடைய முதன்மைப்பணி. இதை முறையாக செய்ததால் தான், தேசிய அளவிலான கலாஉத்சவ் போட்டியில் பங்கேற்க, கோவையில் இருந்து மூன்று மாணவர்கள் தேர்வாகியுள்ளதாக கருதுகிறேன். முறையான தொடர் பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால், இன்னும் அரசுப்பள்ளிகளில் கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லையே?அடிப்படை கட்டமைப்பு வசதிகளில், தன்னிறைவு ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், 'யூடைஸ்' (unified district information system) மூலம், பள்ளியில் உள்ள அனைத்து வசதிகள், மாணவர்கள் எண்ணிக்கை, தேவையான கட்டமைப்பு குறித்து கேட்டறியப்படுகிறது. தேவை இருக்கும் பள்ளிகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி, உரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருகின்றன. இதுதவிர, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், கோவையில் உள்ள பல அரசுப்பள்ளிகளுக்கு, நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக, 'விர்ச்சுவல் கிளாஸ் ரூம்' திட்டத்தை, கோவையில் உள்ள அரசுப்பள்ளியில் ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கிளாஸ் ரூமில், 3-டி தொழில்நுட்பத்தில், பாடங்கள் கையாளப்படும்.ஒரு சிறந்த ஆசிரியரின் பணி?மதிப்பெண்களை தாண்டி, ஒரு ஆசிரியர், புத்தகத்தில் உள்ள தகவல்களை வாழ்க்கையோடு இணைத்து, மாணவனுக்கு புரிய வைப்பது அவசியம். இந்த அனுபவத்தை, அரசுப்பள்ளிகள் உறுதி செய்கின்றன.பள்ளி செல்லா குழந்தைகளுக்காக செயல்படும் திட்டங்கள் குறித்து...?ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. வீடு வீடாக சென்று, 18 வயது வரையுள்ள, பள்ளி செல்லாத, இடைநிற்றல் தழுவிய குழந்தைகளை கண்டறிகிறோம். நடப்பாண்டில் தற்போது வரை, 920 பேர் பள்ளி செல்லாத குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவதோடு, பிளஸ் 2 முடிக்கும் வரை, கண்காணிக்கப்படுவர்.கொரோனா சமயத்தில், கல்வித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், மாற்று தீர்வாக கல்வித்தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் கையாளப்படுகின்றன. ஆசிரியர்கள்ஆன்லைனில் பாடம் சொல்லி தருகின்றனர். மொபைல் போன் இல்லாத மாணவர்களுக்கு, சில ஆசிரியர்கள் நேரில் சென்று விளக்குகின்றனர்.மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், பாடக்கருத்துகளை வீடியோவாக பதிவு செய்து அனுப்புகின்றனர். எந்த வாய்ப்பும் இல்லாவிட்டாலும், மாற்றுத்தீர்வை தேடுவது போல, சவாலான இச்சமயத்தையும், ஆசிரியர்கள் சாதனைக்களமாக மாற்றியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE