அவிநாசி:'அவிநாசியில், 'சிப்காட்' தொழில்கூடம் அமைக்க, நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது' என்ற முதல்வரின் அறிவிப்பால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியம், தத்தனுாரில், 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது. இதற்கு, அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்த்து வந்தனர்.'சிப்காட்' உட்பட எந்தவொரு தொழில் நிறுவனமும் அமைக்க கூடாது; இதனால், விவசாயம் பாதிக்கும்' என, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தை, மக்கள் இயக்கமாக முன்னெடுத்தனர்; 'சிப்காட்' எதிர்ப்பு இயக்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.விவசாயிகளின் கோரிக்கையை பெற்ற தொகுதி எம்.எல்.ஏ., சபாநாயகர் தனபால், 'சிப்காட்' தொழில் கூடம் அமைக்கப்பட மாட்டாது' என, ஏற்கனவே, தெரிவித்திருந்தார்.நேற்று முன்தினம் பெருமாநல்லுாரில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'அவிநாசியில் 'சிப்காட்' அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது,' என, திட்டவட்டமாக தெரிவித்தார்.இது குறித்து, 'சிப்காட்' எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'முதல்வரின் அறிவிப்பு எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே நேரம், அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டால் தான், முழு திருப்தி கிடைக்கும். அதுவரை, விவசாயிகளின் எதிர்ப்பு இயக்கம் தொடரும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE