திருப்பூர்:திருப்பூரில், சட்டவிரோதமாக நடந்து வரும் சூதாட்டம 'கிளப்' விஷயத்தில், மாநகர போலீசார் தங்களது மவுனத்தை கலைத்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.'டாலர் சிட்டி' என பெருமை பெற்ற திருப்பூர் தொழில் வளர்ச்சியில் ஒருபுறம் சிறப்பாக இருந்தாலும், பிற நகரங்களை காட்டிலும், அதிகளவில் மது விற்பனையிலும் சிறப்பாக இருப்பது வேதனையான விஷயமே.
அந்த வரிசையில், தற்போது, முறைகேடாக 'பார்', 'சூதாட்ட கிளப்' அதிகளவில் முளைத்து வருகின்றன. இவ்வகை 'ரெஸ்டாரென்ட்' இணைந்த 'கிளப்'களில், மது அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, சூதாட்டமும் ஜோராக நடக்கிறது.இதுதவிர, டென்னிஸ், வாலிபால், கேரம் உட்பட விளையாட்டு 'கிளப்' நடத்துகிறோம் என 'மன மகிழ் மன்றம்' என்ற பெயரில், அனுமதி பெற்று, முறைகேடாக சூதாட்ட 'கிளப்'பாக மாற்றப்பட்டு, மது விற்பனையும் படுஜோராக நடக்கிறது. இதில், தினமும், லட்சக்கணக்கான ரூபாய் சூதாட்டத்தில் புழங்கி வருகிறது.
அதிலும் விடுமுறை நாட்களில், இந்த தொகை கோடிக்கு மேல் சென்று விடுகிறது. இவ்வாறு, அனுமதியின்றி, திருப்பூர் மாநகர பகுதியில் சூதாட்ட கிளப்புகள் சத்தமில்லாமல் திறக்கப்பட்டு விடியவிடிய விளையாடி வருகின்றனர்.இந்த முறைகேட்டு கண்டுகொள்ளாமல் இருக்க, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன், உளவு போலீசார், உதவி கமிஷனர் அலுவலகம், ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் என, பலருக்கு மாதந்தோறும், மாமூல் தொகையும் கனகச்சிதமாக வழங்கப்படுகிறது.
இந்த 'ஆட்டம்' குறித்து, போலீஸ் வட்டாரத்தினர் கூறியதாவது:திருப்பூர் 'சிட்டி' போலீஸ் வடக்கு மற்றும் தெற்கு சரகம் பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. சமீப காலமாக 'கிளப்' என்ற பெயரில், சீட்டாட்டம், வெட்டாட்டம் என, சட்டவிரோத செயல்கள் அதிகரித்து உள்ளது.
புதிய பஸ் ஸ்டாண்ட், பிச்சம்பாளையம் பிரிவு, கணக்கம்பாளையம் பிரிவு, போயம்பாளையம், அணைப்பாளையம் அருகில், உட்பட பல இடங்களில், 24 மணி நேரமும், பல லட்சக்கணக்கான ரூபாய் புழங்க சூதாட்டம் நடக்கிறது.குறிப்பாக, சனி, ஞாயிற்றுக்கிழமையுடன், 24 மணி நேரமும், தொகை கோடிக்கணக்காக மாறுகிறது. ஒவ்வொரு 'கிளப்'களின் பின்னணியில், ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள், குற்றப்பின்னணியில் கொண்ட நபர்கள் பக்கபலமாக இருக்கின்றனர். இதுபோன்ற நபர்களுடன், சில போலீசாரும் மிகவும் இணக்கமாக வலம் வருகின்றனர்.இதுபோன்ற சட்ட விரோத செயல்களை உளவு பார்த்து, தலைமைக்கு சொல்லி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டிய ஐ.எஸ்., மற்றும் 'டிட்டாச்மென்ட்' போலீசார் என, அனைவரும் மவுனம் காத்து வருகின்றனர்.
அவ்வப்போது, கண்துடைப்புக்காக ஓரிரு இடங்களில், பெயரளவுக்கு 'ரெய்டு' நடக்கிறது.அதையும் மீறி, போலீஸ் 'டீம்' ஒரு இடத்துக்கு செல்வதை, டிபார்ட்மென்டிலுள்ள சில கறுப்பு ஆடுகள் முன்கூட்டியே தகவல் கொடுத்து விடுகின்றனர். ஏதாவது ஒரு நாள், சூதாட்ட கிளப்புகளால் சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
'கண்காணிக்கிறோம்'
இது குறித்து, கமிஷனர் கார்த்திகேயனிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட மனமகிழ் மன்றத்துக்கு அனுமதி வாங்கி, பணம் வைத்து சூதாடுவது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். இது குறித்து துணை கமிஷனர் தலைமையில், சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், சிட்டி முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE