மயிலாடுதுறை:''ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம்,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மயிலாடுதுறையில், கமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:வழியெங்கும் மக்கள் அளித்த வரவேற்பு, தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கி விட்டது என்பதை உணர்த்துகிறது. காமராஜருக்கு பின் ஆட்சிக்கு வந்த அனைவருமே சினிமாக்காரர்கள் தான்; ஒருவரை தவிர. நான் யாருக்கும் அடிமை இல்லை.
நான் யாருக்கும் அரசன் இல்லை. கல்வி பட்ஜெட்டில், ஒரு மாணவனுக்கு, 45 ஆயிரம் ரூபாய் வருகிறது. ஆனால், பள்ளிகள் தரமானதாக இல்லை. சாகாமலேயே நரகத்தை பார்க்க வேண்டும் என்றால், தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் போதும்.மக்கள் நீதி மையம் கட்சி, அரசியல் பழி போடும் கட்சி அல்ல. அரசியல் பழிவாங்கும் கட்சியும் அல்ல. வழிகாட்டும் அரசியல்.எங்கள் கட்சியை மரியாதை இல்லாமல் விமர்சிப்பவர்களை எதிர்த்து விமர்சனம் செய்ய மாட்டோம்.
நாங்கள் வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு பதில் சொன்னாலே போதுமானது. ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பெண்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், கமல்ஹாசன் பேசியதாவது:கொரோனா காலத்தில் வெளியில் செல்ல வேண்டாம். கூட்டத்திற்கு நடுவில் போகாதீர்கள் என்றனர். அவர்களிடம் நான், கூட்டத்திற்கு நடுவில் செல்லவில்லை. என் குடும்பத்திற்கு நடுவில் செல்கிறேன். பேசுகிறேன் என்றேன்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. பொது இடத்தில் பாலியல் சீண்டலுக்காக போலீஸ்காரருக்கு தர்ம அடி விழுகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில், 600 நாட்களை கடந்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE